ஆந்திர நபரிடம் 22 கிலோ கஞ்சா பறிமுதல்
பள்ளிக்கரணை, சென்னை, பள்ளிக்கரணை, வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள தனியார் மருத்துவக் கல்லுாரி அருகே கஞ்சாவை விற்பனை செய்வதாக பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து, தனிப்படை போலீசார் நேற்று தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சூட்கேசுடன் சந்தேகத்திற்கு இடமான முறையில் வந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். சூட்கேசை சோதனையிட்ட போது, அதில் இருந்த 22 கிலோ உயர் ரக கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அந்த நபர் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த உடி சத்யபாபு, 38, என்பதும், ரயில் வாயிலாக ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தி வந்து சென்னை, புறநகரில் மொத்த விற்பனை செய்ததும் தெரிந்தது. அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.பூந்தமல்லி பை பாஸ் பேருந்து நிலையத்தில், நேற்று முன்தினம் இரவு சந்தேகம் படும்படி நின்றிருந்த ஒடிசாவை சேர்ந்த சுதன்ஸ் பாகா, 25 என்பவரை பூந்தமல்லி மதுவிலக்கு போலீசார் விசாரித்தனர். அவர் வைத்திருந்த பையில் 6 கிலோ கஞ்சா இருப்பது தெரிந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், சுதன்ஸ் பாகாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.