சென்னை :சென்னையில் இயக்குவதற்காக, 35 மின்சார பஸ்கள் மாநகர போக்குவரத்து பணிமனையில் நிறுத்தப்பட்டு உள்ளன. பல கட்ட சோதனைகள் முடிந்து, அடுத்த மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என, மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.சென்னை பயணியர் தேவையை போக்கும் வகையில், தனியார் பங்களிப்போடு, 1,100 மின்சார தாழ்தள பேருந்துகளை இயக்க, மாநகர போக்குவரத்து கழகம் முடிவு செய்தது. முதற்கட்டமாக, 500 மின்சார பேருந்துகளை இயக்க, கடந்த ஆண்டு, அசோக் லைலாண்டு துணை நிறுவனமான, ஓ.எச்.எம்.குளோபல் மொபிலிடி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பேருந்து தயாரிப்பு தொடங்கியது. முதற்கட்டமாக தயாரிக்கப்பட்டுள்ள, 35 மின்சார பேருந்துகள், பெரும்பாக்கம் டிப்போவில் நிறுத்தப்பட்டு உள்ளன. இதுகுறித்து, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:முதல்கட்டமாக தயாரிக்கப்பட்டுள்ள 35க்கும் மேற்பட்ட மின்சார பேருந்துகள், பெரும்பாக்கம் பணிமனையில் நிறுத்தப்பட்டு உள்ளன. தனியார் நிறுவனம் பல கட்ட ஆய்வுகளை செய்து வருகிறது. ஆய்வுகள் முடிந்து, பாதுகாப்பு சான்றிதழ் பெற்ற பின், மாநகர போக்குவரத்து கழகத்திடம் முறைப்படி ஒப்படைப்பர்.ஜூன் 15ம் தேதிக்குப்பின், புதிய பஸ்களின் சேவையை துவங்க திட்டமிடப்பட்டு உள்ளது.அதுபோல், மின்சார பஸ்களுக்காக, 20 பணிமனைகளில் சார்ஜிங் மையங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.பல்லவன் இல்லத்தில் உள்ள மத்திய பணிமனை, வியாசர்பாடி, பெரும்பாக்கம், தண்டையார்பேட்டை, பூந்தமல்லி ஆகிய ஐந்து பணிமனைகளில் இந்தபணிகள் இறுதிகட்டத்தில் உள்ளன. தனியார் மின்சார பஸ்களின் சேவை துவங்கும்போது, சார்ஜிங் மையங்களும் பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.