சாக்கடை அடைப்பு நீக்க ரூ.4 கோடியில் இயந்திரங்கள்
திருவொற்றியூர், மழைக்காலத்தில், பாதாள சாக்கடைகளில் அடைப்புகள் ஏற்படுவதால், திருவொற்றியூர் பகுதியில் அடைப்பு ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காண, அடைப்பை நீக்க நவீன இயந்திரம் கோரி, தமிழக முதல்வருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.இதையடுத்து முதற்கட்டமாக, பாதாள சாக்கடைகளில் அடைப்புகளை நீக்கவும், சேற்றை அப்புறப்படுத்தவும், 4 கோடி ரூபாய் செலவில், 'ஜெட்ராடு' மற்றும் 'சூப்பர் சக்கர்' போன்ற ஏழு நவீன இயந்திரங்கள், குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் வாயிலாக வழங்கப்பட்டன.வழங்கப்பட்ட இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நிகழ்ச்சி, நேற்று காலை திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் நடந்தது.இதில், மண்டல குழு தலைவர் தனியரசு பங்கேற்று, கொடியசைத்து வாகனங்களின் பயன்பாட்டை துவக்கினார். அதன்படி, இரு வார்டுகளுக்கு ஒரு இயந்திரம் வீதம், ஏழு இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைக்கப்பட்டுள்ளன. விரைவில், வார்டு ஒன்றிற்கு ஒரு இயந்திரம் என, 14 இயந்திரங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.இதன் மூலம், மழைக்காலத்தில் பாதாள சாக்கடை போன்ற நீர்வழித்தடங்களில் அடைப்புகள் ஏற்படுவது தடுக்கப்படும் என, அதிகாரிகள் கூறினர்.