4 விரைவு ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்குவது நீட்டிப்பு
சென்னை: எழும்பூர் ரயில் நிலையத்தில், மேம்பாட்டு பணிகள் நடந்து வருவதால் ராமேஸ்வரம், தஞ்சாவூர் உட்பட நான்கு விரைவு ரயில்கள், தாம்பரத்தில் இருந்து இயக்குவது, வரும் 29ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: எழும்பூரில் நடந்து வரும் மேம்பாட்டு பணி காரணமாக, விரைவு ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, சில ரயில்கள் தாம்பரம், கடற்கரையில் இருந்து தற்காலிகமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதற்கிடையே, பணிகள் இன்னும் முடியாத நிலையில், சில ரயில்கள் தாம்பரத்தில் இருந்து இயக்குவது நீட்டிக்கப்பட்டுள்ளது ★ தஞ்சாவூர் - எழும்பூர் உழவன், கேரள மாநிலம் கொல்லம் - எழும்பூர் அனந்தபுரி விரைவு ரயில் வரும் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை இயக்கப்படும் ★ ராமேஸ்வரம் - எழும்பூர், சேது விரைவு ரயில், ராமேஸ்வரம் - எழும்பூர் விரைவு ரயில் வரும் 10 முதல் 29 வரை தாம்பரம் வரை இயக்கப்படும் ★ இதேபோல், மேற்கண்ட நான்கு விரைவு ரயில்களும் வரும் 11 முதல் 30ம் தேதி வரையில், எழும்பூருக்கு பதிலாக தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் ★ எழும்பூர் - மும்பை சி.எஸ்.எம்.டி., விரைவு ரயில் வரும் 11 முதல் 30ம் தேதி வரை சென்னை கடற்கரையில் இருந்து இயக்கப்படும் ★ குஜராத் மாநிலம் ஆமதாபாத் - திருச்சிக்கு வியாழன் தோறும் இயக்கப்படும் வாராந்திர ரயில் வரும் 13, 20, 27ம் தேதிகளில் காட்பாடி, வேலுார், விழுப்புரம் என மாற்றுப்பாதையில் செல்வதால், எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டுக்கு செல்லாது ★ திருச்சி - ஆமதாபாத்துக்கு ஞாயிறுகளில் இயக்கப்படும் வாராந்திர ரயில், வரும் 16, 23, 30ம் தேதிகளில் வேலுார், காட்பாடி, திருத்தணி என மாற்றுப்பாதையில் செல்வதால், செங்கல்பட்டு, தாம்பரம், எழும்பூர் செல்லாது இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.