உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போதை பொருள் கடத்தல் பெண் உட்பட 4 பேர் கைது

போதை பொருள் கடத்தல் பெண் உட்பட 4 பேர் கைது

சென்னை: காரில் 'மெத் ஆம்பெட்டமைன்' உள்ளிட்ட போதை பொருள் கடத்தலில் ஈடுபட்ட, சினிமா உதவி இயக்குநர், பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை மாநகர போலீசில், போதை பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு செயல்படுகிறது. இவர்களுக்கு, நுங்கம்பாக்கத்தில் ஒரு கும்பல் போதை பொருள் கடத்தலில் ஈடுபடுவதாக, நேற்று காலை தகவல் கிடைத்தது. இதையடுத்து, நுங்கம்பாக்கத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். நுங்கம்பாக்கம், மகாலிங்கபுரம், லட்சுமணன் தெருவில், சந்தேகத்திற்கு இடமான வகையில் சென்ற காரை மடக்கி சோதனை செய்தனர். இதில், 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான 45 கிராம் மெத் ஆம்பெட்டமைன், 190 கிராம் கஞ்சா, போதை மாத்திரைகள், கஞ்சா ஆயில் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், கேளம்பாக்கத்தைச் சேர்ந்த வாரன் கிரெய்க் கனி, 29, சூளைமேடைச் சேர்ந்த பெண் தஹிரா நிஹால், 26, அசோக் நகரைச் சேர்ந்த லட்சுமி நரசிம்மராவ், 27, வடபழனியைச் சேர்ந்த ஸ்ரீராம், 28 ஆகியோர், போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்களை பிடித்து, நுங்கம்பாக்கம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதில், வாரன் கிரெய்க் கனி என்பவர், ஏற்கனவே கைது செய்யப்பட்டு, நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்தவர் என தெரியவந்தது. தஹிரா நிஹால் தனியார் நிறுவன ஊழியராகவும், லட்சுமி நரசிம்மராவ் சினிமா உதவி இயக்குநராகவும், ஸ்ரீராம் சமூக ஆர்வலர் போல செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து, போதை பொருட்களுடன், கார், ஐபோன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !