பள்ளிகளுக்கு வராத 43 மாணவர்கள் சுனாமி குடியிருப்பில் அதிகாரிகள் முகாம்
எண்ணுார், சுனாமி குடியிருப்பில் இடைநின்ற, 43 மாணவ - மாணவியரை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில், கல்வி அதிகாரிகள் விழிப்புணர்வு மேற்கொண்டனர்.எண்ணுார் சுனாமி குடியிருப்பில், 150 பிளாக்குகளில், 6,000 வீடுகள் உள்ளன. இந்த வளாகத்தில் செயல்படும், இரண்டு துவக்கப் பள்ளிகளில், 350; நடுநிலைப் பள்ளியில், 525 மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.குடும்ப சூழல், போதிய விழிப்புணர்வின்மையால், 43 மாணவ - மாணவியர்கள் கல்வியை தொடர முடியாமல் இடைநின்றுள்ளனர். சென்னை கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவுறுத்தல்படி, இடைநின்ற மாணவர்களை, மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் வகையிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி, சுனாமி குடியிருப்பில், நேற்று காலை நடந்தது.இதில், சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி, உதவி திட்ட இயக்குனர் காமராஜ், வட்டார கல்வி அலுவலர் குமார், மீன்வளத்துறை, காவல்துறையினர் மற்றும் தனியார் தன்னார்வ அமைப்பினரும் பங்கேற்றனர்.அதன்படி, கல்வியை தொடராமல் இடைநின்ற, 43 மாணவ - மாணவியரின் வீடுதோறும் சென்று, கல்வியின் அவசியம், தமிழக அரசு மேற்கொள்ளும் இலவச திட்டங்கள் குறித்து, பெற்றோர் - மாணவர்களுக்கு எடுத்துரைத்தனர்.மாணவர்களுக்கு, ஆதார் அட்டை, சாதி சான்றிதழ் என, ஆவணங்கள் இன்மையால், கல்வியை தொடர முடியாத சூழல் ஏற்பட்டிருந்தால், உடனடியாக அவற்றை வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது; விரைவில் பள்ளிகளில் இணைவர் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.