உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 595 பூங்கா பராமரிப்பு... தனியார்வசம்! மாநகராட்சியில் தீர்மானம்

595 பூங்கா பராமரிப்பு... தனியார்வசம்! மாநகராட்சியில் தீர்மானம்

சென்னை : சென்னை மாநகராட்சியில் ஒன்பது விளையாட்டு திடல்கள், 595 பூங்காக்களை தனியார் பராமரிக்க, ஒப்பந்தம் விடப்படுகிறது. மேலும், சாலையில் சுற்றித்திரியும் மாடுகளை பராமரிக்க, ஏழு இடங்களில், 'கோசாலை' அமைக்கவும் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து உள்ளது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கவுன்சில் கூட்டம், மேயர் பிரியா தலைமையில், நேற்று நடந்தது.நேரமில்லா நேரத்தின்போது பேசிய, தி.மு.க., 12வது வார்டு கவுன்சிலர் கவி கணேஷ், ''சென்னையில் திடக்கழிவு பிரச்னை பிரதான ஒன்றாக உள்ளது. எனவே, திடக்கழிவுக்கென, தனியாக ஒரு நிலைக்குழுவை ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.இதற்கு பதிலளித்த மேயர் பிரியா, ''திடக்கழிவுக்கு என, நிலைக்குழு அமைப்பது குறித்து பரிசீலிக்கப்படும்'' என்றார்.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் விமலா பேசுகையில், ''கால்பந்து செயற்கை புல் விளையாட்டு திடல்களை தனியாருக்கு வழங்குவதால், ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்படுவர். அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில், இலவசமாக அனுமதிக்க வேண்டும்,'' என்றார். இதற்கு மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் பதிலளிக்கையில், ''பராமரிப்பு செலவை ஈடு செய்வதற்காகவே, கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் விளையாடி வரும் வீரர்களுக்கு பயிற்சி மேற்கொள்வதற்கு இலவசம்,'' என்றார்.இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கட்சியை சேர்ந்த பாத்திமா அஹமத் பேசுகையில், ''மெரினா நீச்சல் குளத்தில் பெண் பயிற்சியாளர்களை நியமிக்க வேண்டும்,'' என்றார்.துணை மேயர் மகேஷ்குமார் அளித்த பதில், ''மெரினா நீச்சல் குளத்தில் பெண் நீச்சல் பயிற்சியாளர்கள் நியமிக்கப்படும். மேலும், நீள கொடி சின்னம் பெற, மெரினா கடற்கரையை மேம்படுத்தவும், அழகுப்படுத்தவும், 5.95 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.சென்னை மாநகராட்சியின் அனைத்து கவுன்சிலர்களுக்கும், கையடக்க கணினியான, 'டேப்' வழங்கப்பட்டது. இதற்காக தலா 47,646 ரூபாய் என, மொத்தம், 95.29 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

மெரினாவில் 'ரோப் கார்'

தி.மு.க., கவுன்சிலர் செம்மொழி பேசுகையில், ''மெரினா கடற்கரையில், 'ரோப் கார்' வசதி ஏற்படுத்த வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கை. இதை, மாநகராட்சி செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.அ.தி.மு.க., கவுன்சிலர் சத்தியநாதன் பேசுகையில், ''இல்லந்தோறும் குடிநீர் இணைப்பு திட்டத்தை, சென்னை குடிநீர் வாரியம் செயல்படுத்தி வருகிறது. அதற்காக, சாலை வெட்டு பணிக்கு, குடியிருப்புவாசிகளிடம், 24,500 ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர். அத்தொகை, மாநகராட்சிக்கும் வருவதில்லை,'' என்றார். பதில் அளித்து மேயர் பிரியா பேசுகையில், ''மெரினாவில் ரோப் கார் தொடர்பாக, ஏற்கனவே நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்பந்தப்புள்ளி கோருவதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில், 'ரோப் கார்' வசதி ஏற்படுத்தப்படும். முறைப்படியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அத்தொகை மாநகராட்சி வருகிறதா என்பது ஆராயப்படும்,'' என்றார்.

மாநகராட்சி கூட்டத்தில், 79 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானவை:

மாநகராட்சிக்கான நிதி சுமையை குறைக்க நிலையான வருவாய் பகிர்வு அடிப்படையில் விளையாட்டு திடல்கள் தனியாருக்கு ஒப்பந்தம் விடப்பட உள்ளது. இந்த திடலில் பயிற்சி பெற, ஒரு மணி நேரத்திற்கு, 120 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, மாநகராட்சிக்கு ஆண்டுக்கு, 93.31 லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கும்.சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட, 595 பூங்காக்களை ஆண்டுதோறும் பராமரிப்பு பணிகளுக்கு, தனியாருக்கு வழங்கப்பட உள்ளது.அண்ணா நகர் ஷெனாய் நகர் 1வது பிரதான சாலை, தேனாம்பேட்டை பீட்டர்ஸ் சாலை, வளசரவாக்கம் நொளம்பூர், பெருங்குடி, வீரபாண்டிய பொம்மன் குறுக்கு தெரு, சோழிங்கநல்லுார் உயிரி இயற்கை எரிவாயு உற்பத்தி கூடம் அருகே, கோடம்பாக்கம் காந்தி நகர் வடபழனி முருகன் கோவில் அருகே, ஆலந்துார், பி.வி.நகர் 3வது பிரதான சாலை ஆகிய ஏழு இடங்களில், 11.43 கோடி ரூபாய் மதிப்பில் கோசாலை அமைக்கப்பட உள்ளது.சாலையில் திரியும் மாடுகளை பராமரிக்கும் வகையில், இந்த 'கோசாலை' அமைக்கப்பட உள்ளது.ஷெனாய் நகரில் உள்ள 'அம்மா' அரங்கத்தில் தற்போது வாடகை, 3.40 ௨லட்சம் ரூபாயாக உள்ளது. அது, 5.42 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. அதேபோல், சர் பிட்டி தியாகராய அரங்கம், 20,650 ரூபாய் வாடகை இருக்கும் நிலையில், 59,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த இரண்டிலும் மாநகராட்சிக்கு போதிய வருவாய் கிடைக்காததால், ஐந்தாண்டுக்கு தனியாருக்கு குத்தகை விடப்பட உள்ளது. இதனால், ஆண்டுக்கு, 16 லட்சம் ரூபாய் நிலையான வருவாய் கிடைக்கும்.இவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ