கூட்ட நெரிசல் பஸ்களை குறிவைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட 6 பேர் கைது
தாம்பரம், கூட்ட நெரிசல் அதிகமான பேருந்துகளை குறிவைத்து, தொடர் திருட்டில் ஈடுபட்ட ஆறு பேரை, போலீசார் நேற்று கைது செய்தனர். அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் முருகன், 25. இவரது மனைவி பூமிகா. இருவரும், நேற்று காலை, திண்டிவனத்தில் இருந்து பேருந்து மூலம் தாம்பரம் வந்தனர். அங்கிருந்து அரும்பாக்கத்திற்கு செல்ல, தடம் எண் '70வி' என்ற பேருந்தில் ஏறினர். அப்போது, அவரது மொபைல் போன் மாயமானது. பேருந்தில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றிருந்த மூன்று பேரை பிடிக்க முயன்றபோது, அவர்கள் தப்பினர். முருகன் புகாரையடுத்து, தாம்பரம் பேருந்து நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை, தாம்பரம் போலீசார் ஆய்வு செய்தனர். அதில், வாலிபர் ஒருவர் மொபைல் போனை திருடுவது பதிவாகியிருந்தது. மேலும், அங்கேயே காத்திருந்து, கூட்ட நெரிசலாக இருக்கும் அடுத்தடுத்த பேருந்துகளில் அந்த வாலிபர் ஏறி, மொபைல் போன் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. கூட்டம் அதிகமாக இருந்த பேருந்தில், அந்த வாலிபர் ஏறுவதை பார்த்த போலீசார், அவரை மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில், அவர் மட்டுமின்றி, அதே பேருந்தில் அவரது கூட்டாளிகளான வடமாநிலத்தைச் சேர்ந்த மேலும் ஐந்து பேர் இருந்ததையும் கண்டுபிடித்து, ஆறு பேரையும் கைது செய்தனர். விசாரணையில், வெங்கம்பாக்கத்தைச் சேர்ந்த விக்னேஷ், 21, ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் பத்ரோ, 25, அஜய், 23, ஜெகன், 22, ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இம்மானுவேல், 28, வெங்கடேஷ், 22, என்பது தெரியவந்தது. இந்த கும்பல், கூட்டமாக இருக்கும் பேருந்துகளிலும், இரவு நேரங்களில் துாங்கிக் கொண்டிருக்கும் நபர்களிடமும் பல மாதங்களாக மொபைல் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. திருடும் மொபைல் போனை உடனடியாக அலுமினியம் பாயிலிங் பேப்பரில் பேக்கிங் செய்து, சிக்னலை துண்டித்து, மாட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இந்த கும்பலிடம் இருந்து, விலையுயர்ந்த, 14 மொபைல் போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.