| ADDED : டிச 29, 2025 07:08 AM
சிட்லப்பாக்கம்: பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள, 11 ஊராட்சிகளில் குப்பை சேகரிக்க வசதியாக, 68 புதிய வாகனங்கள் வாங்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. பரங்கிமலை ஊராட்சி ஒன்றியத்தில், 15 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் குப்பை அகற்றும் பணியில், மூன்று சக்கர வாகனம், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்கள் பயன்படுத்தப் படுகின்றன. சில ஊராட்சிகளில் போதிய வாகனங்கள் இல்லாததால், குப்பை அகற்றும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், சில ஊராட்சிகளில் வாகனங்கள் இருந்தும், அவை அடிக்கடி பழுதாகிவிடுவது வாடிக்கையாகி விட்டது. பழுதாகும் வாகனங்களை, ஒன்றிய அதிகாரிகள் உடனுக்குடன் சரிசெய்து கொடுப்பதும் இல்லை. இதனால், ஊராட்சிகளில் தடையின்றி குப்பை சேகரிக்க வசதியாக, போதிய வாகனங்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, 68 புதிய மூன்று சக்கர வாகனங்கள் வாங்கப் பட்டுள்ளன. அந்த வாகனங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. விரைவில், இந்த வாகனங்கள், 11 ஊராட்சிகளுக்கும் பிரித்து வழங்கப்பட உள்ளன என, அதிகாரிகள் தெரிவித்தனர்.