உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயிலின் முகப்பு பகுதியில் பிரத்யேகமாக அவசர கால கதவுகள் அமைக்கப்படும்

ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயிலின் முகப்பு பகுதியில் பிரத்யேகமாக அவசர கால கதவுகள் அமைக்கப்படும்

சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோவில், ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயிலின் முகப்பு பகுதியில் பிரத்யேகமாக அவசர கால கதவுகள் அமைக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.சென்னையில் இரண்டாவது கட்டமாக மூன்று வழித்தடங்களில் 118கி.மீ., துாரத்திற்கு 61,843 கோடி ரூபாயில் மெட்ரோ திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மாதவரம் - சிப்காட்; 45 கிலோ மீட்டர் துாரத்திற்கும், கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி பைபாஸ்; 26.1 கிலோ மீட்டர் துாரத்திற்கும், மாதவரம் - சோழிங்கநல்லுார்; 47 கிலோ மீட்டர் துாரத்திற்கும் மெட்ரோ ரயில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ரயில் நிலையங்கள் அமைப்பது, ரயில்கள் இயக்கத்தில் புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.மூன்று வழித்தடங்களில் பணிகள் முடிந்து பிறகு, 138 ஓட்டுனர் இல்லாத ரயில்களை இயக்க மெட்ரோ ரயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஒவ்வொரு மெட்ரோ ரயிலும் மூன்று பெட்டிகளைக் கொண்டிருக்கும். முதல் கட்டமாக, ஒட்டுனர் இல்லாமல் இயக்கப்படும் மூன்று பெட்டிகளை கொண்ட 36 மெட்ரோ ரயில்களை உருவாக்கும் ஒப்பந்தம் அல்ஸ்டோம் டிரான்ஸ்போர்ட் நிறுவனத்துடன் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தம் வாயிலாக, 108 மெட்ரோ ரயில் பெட்டிகளை தயாரித்து, சென்னை மெட்ரோ நிறுவனத்துக்கு வழங்கும்.இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: 2028ல் இரண்டாம் கட்டத்தில் 118 கி.மீ., துாரத்திற்கு மெட்ரோ ரயில் பணிகளை முடிந்து இயக்கும் போது, சென்னையில் எங்கு பார்த்தாலும் மெட்ரோ ரயில் சேவை கிடைக்கும். நியாயமான கட்டணத்தில் பயணியர் விரைவாக பயணம் செய்ய முடியும். பயணியரின் தேவைக்கு ஏற்றார் போல், மூன்று அல்லது ஆறு பெட்டிகள் கொண்ட ரயில்கள் இயக்கப்படும். இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் ரயில்கள் இயக்கத்திற்கு சி.பி.டி.சி., எனப்படும் கம்யூட்டர் பேஸ்டு டிரெய்ன் கன்ட்ரோல் சிஸ்டம் என்ற புதிய திட்டத்தை செயல்படுத்த உள்ளோம். மணிக்கு 80 கி.மீ., வேகத்தில் செல்லும். இதனால், அதிகபட்சமாக 90 நொடிகளுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்க முடியும். ஓட்டுனர் இல்லாத மெட்ரோ ரயில்களை இயக்க இந்த சிக்னல் தொழில்நுட்பம் மிகவும் அவசியமானது. இந்த ரயிலில், பயணியர் வசதியாக நிற்க இடவசதி, கூடுதல் சிசிடிவி கேமிராக்கள், மொபைல், லேப்டாப்களுக்கு சார்ஜிங் வசதிகளும் அமைக்கப்படும். அதுபோல், மெட்ரோ ரயிலில் இருபுறமும் முகப்பு பகுதியில் பிரத்யேகமாக அவசர கால கதவுகள் அமைக்கப்படும். இந்த கதவுகள் சற்று அகலமாக இருக்கும் என்பதால், அவசர காலத்தில் பயணியர் வேகமாக வெளியேற முடியும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ