உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  ஆயிரம்விளக்கு 2வது மெட்ரோ நிலையத்தில் பல அடுக்குகளில் அமையுது வணிக வளாகம்

 ஆயிரம்விளக்கு 2வது மெட்ரோ நிலையத்தில் பல அடுக்குகளில் அமையுது வணிக வளாகம்

சென்னை: ஆயிரம்விளக்கு பகுதியில் அமைய உள்ள இரண்டாவது மெட்ரோ ரயில் நிலையம் அருகில், பல அடுக்குகளுடன் புதிய வணிக வளாகம் அமைக்கப்பட உள்ளது. சென்னையில் மீனம்பாக்கம் - விம்கோ நகர்; ஆலந்துார் - சென்ட்ரல் என இரு வழித்தடங்களில், மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் மூன்று வழித்தடங்களில், மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், மாதவரம் - சிறுசேரி 'சிப்காட்' தடத்தில் மேற்கொள்ளப்படும் ரயில் பாதை, மீனம்பாக்கம் - விம்கோ நகர் இடையே, ஆயிரம்விளக்கு பகுதியுடன் இணைக்கப்படுகிறது. அதாவது, ஆயிரம்விளக்கு பகுதியில், திரு.வி.க., சாலை அருகில் இரண்டாவது மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கும் பணிகள், முழு வீச்சில் நடக்கின்றன. இந்நிலையத்தில் வணிக வளாகம் அமைப்பதற்கான திட்டத்தை, மெட்ரோ ரயில் நிறுவனம் முன்னெடுத்துள்ளது. கூடுதல் கவனம் இதுகுறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், பேருந்து, ரயில் நிலையங்கள் இணைப்பு வசதி, கூடுதல் வாகன நிறுத்தங்கள் அமைப்பது உள்ளிட்டவற்றில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறோம். தற்போதுள்ள முதற்கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் நந்தனம், ஆயிரம் விளக்கு, கீழ்ப்பாக்கம் பகுதிகளில், இரண்டாம் கட்ட வழித்தட பாதைகளை இணைக்க உள்ளோம். ஆயிரம்விளக்கு பகுதியில், திரு.வி.க., சாலை அருகில், ஒயிட்ஸ் சாலையின் கீழ் பகுதியில், 150 மீட்டர் நீளம், 22 மீட்டர் அகலத்தில் பிரமாண்டமாக மெட்ரோ ரயில் நிலையம் அமைப்பதற்கான பணிகள் நடந்து வருகின்றன. ஆயிரம்விளக்கு பகுதியின் இரண்டாவது மெட்ரோ ரயில் நிலையத்தில், மூன்று மின்துாக்கிகள், 24 நகரும்படிகள் அமைக்கப்படும். சவாலான பணி ஏற்கனவே உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு கீழே, மற்றொரு ரயில் நிலையம் அமைப்பது, சவாலான பணி. இந்த இரு ரயில் நிலைய வளாகங்களில், பல அடுக்குமாடி கட்டடம் அமைக்கப்படும். வணிக வளாகம், பொழுதுபோக்கு அம்சங்கள், அலுவலகங்கள், உணவகங்கள் அமைக்கப்படும். இதற்கான, விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளோம். இந்த தடத்தில் மெட்ரோ ரயில் பணிகள் முடிந்து, பயன்பாட்டிற்கு வரும்போது, இந்த வணிக வளாகமும் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர். வெளியேறிய ரசாயன கலவையால் வாகன போக்குவரத்தில் தடுமாற்றம் ஆயிரம்விளக்கு பகுதி, ஒயிட்ஸ் சாலை, திரு.வி.க., சாலை அருகில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் நடந்து வருகின்றன. ராட்சத இயந்திரங்களால் பள்ளம் தோண்டப்பட்டு, அதனுள் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. தோண்டி எடுக்கப்பட்டு, மண்ணுடன் வெளியேறும் ரசாயன கலவை, குழாய்கள் வாயிலாக, அருகே உள்ள பெரிய கன்டெய்னர் பெட்டிகளில் சேகரிக்கப்பட்டு, இரவில் வெளியிடங்களுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இந்நிலையில், கன்டெய்னர்களுக்கு செல்லும் குழாய்களில் இருந்து, நேற்று மாலை 6:15 மணிக்கு திடீரென ரசாயன கலவை வெளியேறி திரு.வி.க., சாலை பகுதியில் தேங்கியது. இந்த கலவையால், 'பீக் ஹவர்ஸ்' எனும் அலுவலக நேரத்தில், பணி முடித்து திரும்பிய வாகன ஓட்டிகள், பேருந்திற்காக காத்திருந்த பயணியர் பெரிதும் பாதிக்கப்பட்டனர். தகவலறிந்து வந்த போக்குவரத்து போலீசார், மெட்ரோ ஊழியர்களுடன் சேர்ந்து, போக்குவரத்தை மாற்றி அமைத்தனர். அண்ணா சாலை சத்யம் தியேட்டர் சிக்னலில் இருந்து இடதுபுறமாக, திரு.வி.க., சாலை வழியாக இயக்கப்பட்ட வாகனங்களை, அண்ணா சாலையில் நேராக செல்லும் வகையில் மாற்றப்பட்டன. இதற்கிடையே ரசாயன கலவையை உடனே அகற்ற உரிய இயந்திரம் இல்லாததால், துடைப்பம், மண் அள்ள பயன்படும் இரும்பு உபகரணம், பொக்லைன் இயந்திரத்தால், மெட்ரோ ஊழியர்கள் அகற்றினர். இரவு 7:45 மணிக்கு பின், பழையபடி திரு.வி.க., சாலை வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை