அசோக் நகர்: 'ஆன்லைன்' விளம்பரத்தை நம்பி மர்ம நபரை தொடர்பு கொண்ட வாலிபருக்கு, கையில் கொப்பளம் ஏற்பட்டதோடு, 28,000 ரூபாயை பறிகொடுக்கும் அவலமும் நிகழ்ந்துள்ளது. அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அமீத் அலி, 21, சென்னை தி.நகரில் உள்ள துணிக்கடையில் பணிபுரிகிறார். இம்மாதம் 26ம் தேதி, அவரது முகநுால் பக்கத்தில் ஒரு விளம்பரம் வந்தது. அதில் குறிப்பிட்டிருந்த மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, எதிர்முனையில் பேசிய மர்ம நபர், சில பெண்களின் புகைப்படங்களை, அமீத் அலியின் எண்ணிற்கு அனுப்பியுள்ளார். தனக்கு பிடித்த பெண்ணை தேர்வு செய்த அமீத் அலி, மர்ம நபர் கொடுத்த வங்கி கணக்கிற்கு, 28,000 ரூபாயையும், அவரது முகவரியையும் அனுப்பியுள்ளார். வெகுநேரமாகியும் எந்த பெண்ணும் வராததால், அதே மொபைல் போன் எண்ணிற்கு, அமீத் அலி அழைத்து பேசினார். அந்த மர்ம நபர், 'பொட்டாசியம் பெர்மாங்கனேட் வேதி பொருளை கடையில் வாங்கி கொள்ளுங்கள். அதை சர்க்கரையுடன் கலந்து கையில் தேய்த்து முடிப்பதற்குள் அந்த பெண் வருவார்' என கூறியுள்ளார். அந்த நபர் கூறியதை நம்பி, அந்த வேதி பொருளை வாங்கிய அமீத் அலி, தன் கையில் தேய்த்ததும், உள்ளங்கையில் வீக்கம் ஏற்பட்டு, வலியால் துடித்தார். அவரது அலறல் கேட்டு வந்த நண்பர், அமீத் அலியை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தார். இதுகுறித்த புகாரையடுத்து, அசோக் நகர் போலீசார், அமீத் அலி பணம் அனுப்பிய வங்கி கணக்கை வைத்து விசாரிக்கின்றனர்.