உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அம்பத்துார் சாலையில் ஏற்பட்ட திடீர் மெகா பள்ளம் பைக்குடன் விழுந்த வாலிபர் மீட்பு; லாரியும் சிக்கியது

அம்பத்துார் சாலையில் ஏற்பட்ட திடீர் மெகா பள்ளம் பைக்குடன் விழுந்த வாலிபர் மீட்பு; லாரியும் சிக்கியது

அம்பத்துார்:அம்பத்துார், மேனாம்பேடு பகுதியில் சாலையில் ஏற்பட்ட திடீர் 'மெகா' பள்ளத்தில் லாரி சிக்கியது. அதை பின்தொடர்ந்து, பைக்குடன் உள்ளே விழுந்த வாலிபர், அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அம்பத்துார், மண்ணுார்பேட்டையில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி, அலுமினிய பொருட்களை ஏற்றிக்கொண்டு நேற்று மதியம் 1:45 மணியளவில் ஈச்சர் லாரி சென்று கொண்டிருந்தது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்த சூசைராஜ், 50, என்பவர் லாரி ஓட்டி சென்றார். அம்பத்துார், மேனாம் பேடு - கருக்கு பிரதான சாலையில் நாராயணா நகர் அருகே லாரி சென்றபோது, சாலையில் திடீரென 10 அடி அகலம்; 15 அடி ஆழத்திற்கு மெகா பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் லாரியின் பின்பக்க சக்கரம் சிக்கியது. லாரியை பின் தொடர்ந்து, 'ஹோண் டா யூனிகார்ன்' பைக்கில் வந்த வாலிபர், பைக்குடன் உள்ளே விழுந்தார். அக்கம்பக்கத்தினர், பள்ளத்தில் விழுந்த வாலிபரை மீட்டனர். அவர், கள்ளிக்குப்பத்தைச் சேர்ந்த மருந்து கடை உரிமையாளரான சரவணன், 34, என்பது தெரிய வந்தது. அதிர்ஷ்டவசமாக அவர், லேசான காயங்களுடன் உயிர் தப்பினார். அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், அவர் வீடு திரும்பினார். தகவலறிந்து, அங்கு விரைந்த அம்பத்துார் போலீசார் கிரேன் உதவியுடன், பள்ளத்தில் சிக்கிய லாரியையும், பைக்கையும் அரை மணிநேரம் போராடி மீட்டனர். மேலும், அசம்பாவிதங்கள் ஏற்படாதபடி பள்ளத்தைச் சுற்றி தடுப்புகள் அமைத்தனர். போக்குவரத்து மாற்றம் கருக்கு பிரதான சாலை, அம்பத்துார் மற்றும் கொரட்டூரை இணைக்கும் பிரதான சாலையாகும். மேலும், ஆங்காங்கே கோவில்களில் திருவிழாக்கள் நடப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்க, கொரட்டூரில் இருந்து வரும் வாகனங்களை, பெரியார் தெரு அருகே போலீசார் தடுத்து நிறுத்தி, பட்டரைவாக்கம் வழியாக திருப்பிவிட்டனர். அம்பத்துாரில் இருந்து வரும் வாகனங்களை, மேனாம்பேடு, டி.என்.இ.பி., காலனி வழியாக செல்ல அறிவுறுத்தினர். அம்பத்துார், மேனாம்பேடு, கருப்பன் குளத்தில் இருந்து, கருக்கு பகுதி வரை செல்லும், 700 மி.மீ., விட்டம் கொண்ட கழிவு நீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் வெளியேறியுள்ளது. இதனால், மண் அரிப்பு ஏற்பட்டு, சாலையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை நீக்கும் பணிகள் இன்று நடக்கும். - மெட்ரோ அதிகாரிகள்.

இரண்டாவது சம்பவம்

கருக்கு பிரதான சாலையில், மேனாம்பேடு, 'அம்மா' உணவகம் அருகே, கடந்தாண்டு ஜன., 4ம் தேதி அதிகாலை, 10 அடி அகலம்; 20 ஆழத்தில் மெகா பள்ளம் ஏற்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அதே வாரம், கொரட்டூர் கிழக்கு நிழற்சாலையிலும், சாலை உள்வாங்கி மெகா பள்ளம் ஏற்பட்டது. இதனால், அம்பத்துாரில் உள்ள பிரதான சாலைகளின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ