உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் 11 துணை மருத்துவ படிப்புக்கு அனுமதி

கிண்டி பல்நோக்கு மருத்துவமனையில் 11 துணை மருத்துவ படிப்புக்கு அனுமதி

சென்னை:சென்னை, கிண்டியில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனையில், 11 துணை மருத்துவ படிப்புகளை, இந்தாண்டு துவங்க அரசு அனுமதி அளித்துள்ளது.மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் வைத்த கோரிக்கையை ஏற்று, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் சுப்ரியா சாஹு அரசாணை பிறப்பித்து உள்ளார்.அதில் கூறியிருப்பதாவது:கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், எட்டு சான்றிதழ் படிப்புகள், இரண்டு பட்டய படிப்புகள், ஒரு பட்ட படிப்பு என, 11 துணை மருத்துவ படிப்புகளை, இந்தாண்டு முதல் துவங்க அனுமதிக்கும்படி, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனர் கோரிக்கை விடுத்திருந்தார்.அதன்படி, மருத்துவமனையில், ஓராண்டு படிப்பு மற்றும் மூன்று மாத பயிற்சியை உள்ளடக்கிய மயக்கவியல், அறுவை சிகிச்சை அரங்கு, இதயவியல் சோனோகிராபி, இதய இடையீட்டியல் ஆய்வகம், டயாலிசிஸ், அவசர சிகிச்சை, 'இசிஜி - ஓடுபொறி' தொழில்நுட்புனர் படிப்புகளை தலா, 20 இடங்களுடன் துவங்க, அனுமதி அளிக்கப்படுகிறது.அதேகால அளவிலான, 'பம்ப் தொழில்நுட்புனர் படிப்பினை, 10 இடங்களுடன் துவங்க அனுமதிக்கப்படுகிறது. இவை அனைத்தும் சான்றிதழ் படிப்பாகும்.இரண்டு ஆண்டுகள் படிப்பு மற்றும் மூன்று மாத கால உள்ளுறை பயிற்சி உடைய ரேடியோ பரிசோதனை தொழில்நுட்ப டிப்ளமோ என்ற டி.ஆர்.டி.டி., படிப்பு, மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப டிப்ளமோ என்ற டி.எம்.எல்.டி., படிப்பையும், தலா 20 இடங்களுடன் துவங்க அனுமதிக்கப்படுகிறது.மேலும், மூன்று ஆண்டுகள் படிப்பு மற்றும் ஓராண்டு உள்ளுறை பயிற்சி கொண்ட பி.எஸ்சி., நியூரோ எலக்ட்ரோ பிசியாலஜி பட்ட படிப்பை, ஐந்து இடங்களுடன் துவங்கலாம்.இதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் மேற்கொள்ளும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை