தி.மு.க., ஆதரவு ஓட்டுச்சாவடி அலுவலர்களால் குளறுபடி ஆலோசனை கூட்டத்தில் அ.தி.மு.க., - பா.ஜ., குற்றச்சாட்டு
ராயபுரம்:'ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தி.மு.க., ஆதரவாளர்களாக இருப்பதால், வாக்காளர் பட்டியலில் பெரும் குளறுபடி நடக்கிறது' என, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்தம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், அ.தி.மு.க., - பா.ஜ., பிரதிநிதிகள் குற்றம் சாட்டினர். 'என் அம்மா பெயரை நீக்க கடிதம் கொடுத்தும், வாக்காளர் பட்டியலில் இருந்து இன்னும் நீக்கவில்லை' என, தி.மு.க., பிரதிநிதியும் குற்றம் சாட்டினார்.சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய, 16 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல்கள் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பான ஆலோசனை கூட்டம், சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில், நேற்று நடந்தது. சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அனில் மேஸ்ரம் தலைமை வகித்தார். இதில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் பலரும் பங்கேற்று, ஆலோசனைகளை கூறினர்.
அம்மா பெயர் இருக்கு
கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சியினர் கூறியதாவது:* தி.மு.க., சட்டத் துறை மாநில துணை செயலர் மருதுகணேஷ்: சிறப்பு வாக்காளர் முகாமில் சேர்க்கப்பட்ட வாக்காளர்களின் விபரங்கள் 'பூத்' வாரியாக தராமல், சீரியல்படி கொடுக்கப்பட்டுள்ளதால், சரிபார்க்க முடியாத நிலை உள்ளது. இறந்தோரின் பெயரை நீக்கும் நடவடிக்கைகளை, தேர்தல் கமிஷன் உடனே மேற்கொள்வது இல்லை. என் தாயாரும், தி.மு.க., முன்னாள் கவுன்சிலருமான பார்வதி, 2023, ஜூலை 5ல் இறந்தார். நீக்க கடிதம் கொடுத்தும் இதுவரை அவர் பெயர் நீக்கப்படவில்லை. ஒரே மையத்தில், 10 ஓட்டுச்சாவடிகள் உள்ளன. இதனால், ஓட்டு மையத்தில் அசம்பாவிதங்கள், உயிர் சேதம் உள்ளிட்டவை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஒரு மையத்தில், அதிகபட்சம் ஐந்து ஓட்டுச்சாவடிகளுக்கு மேல் வைக்கக்கூடாது.குளறுபடிதான்
* பா.ஜ., மாநில செயலர் கராத்தே தியாகராஜன்: கடந்த முறை நடந்த வாக்காளர் சரிபார்ப்பு கூட்டத்திலும், இந்த கூட்டத்திலும், மாவட்ட தேர்தல் அதிகாரியும், சென்னை மாநகராட்சி கமிஷனருமான குமரகுருபரன் பங்கேற்கவில்லை. தொடர்ந்து அவர் புறக்கணிப்பது ஏன். அவர் பங்கேற்கவில்லை என்ற விபரத்தை முன்கூட்டியே ஏன் தெரிவிக்கவில்லை. ஓட்டுச்சாவடி அலுவலர்கள் அனைவரும், தி.மு.க.,வைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், அதிக குளறுபடிகள் நடக்கின்ன.* அ.தி.மு.க., மாவட்ட செயலர் தி.நகர் சத்யா: தி.நகர் தொகுதியில் இறந்த 79 பேரை நீக்க பலமுறை கடிதம் கொடுத்தும், பட்டிலயில் நீக்கப்படாமல் உள்ளது. அசோக் நகர், 10 அவென்யூவில் உள்ள கட்டடத்தை இடித்தனர். அதில் உள்ள வாக்காளர்களை நீக்காமல் வைத்துள்ளனர். தி.நகரில் ஓட்டு இல்லை என்று பலரும் திரும்பிச் சென்றனர். வீடு இல்லாத நபர்களுக்கு ஓட்டு இருக்கிறது. இறந்தவர்கள் பெயரில் ஓட்டு போடுகின்றனர். அதற்கான கோப்புகளை வாக்காளர் பட்டியல் பார்வையாளரான அனில் மேஸ்ரத்திடம் கொடுத்துள்ளோம்.ஓட்டுச்சாவடி அலுவலர்கள் தி.மு.க.,வினர் கட்டுப்பாட்டில் உள்ளனர். இதனால் அதிக குளறுபடிகள் நடக்கின்றன. இந்த பணியை தனியார் ஏஜென்சியிடம் கெடுத்தால் சிறப்பாக செய்து முடிப்பர். வாக்காளர் பெயர் சேர்த்தல், நீக்குதல் உள்ளிட்டவற்றை அரசு முறையாக செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
'சரியாக பணியாற்றாத அலுவலர்கள் நீக்கம்'
சென்னை மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் அனில் மேஸ்ரம் கூறியதாவது: புதிய வாக்காளர்களை சேர்ப்பதற்கு, கல்லுாரிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில், விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும். 18 வயது பூர்த்தியான அனைவரையும் வாக்காளர்களாக பதிவு செய்ய அறிவுறுத்த வேண்டும்.பெயர் நீக்கம் கோரி வரும் விண்ணங்களை பரிசீலிக்கும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், கள ஆய்வு செய்தபிறகே, பெயரை நீக்க வேண்டும். முகவரி மாற்றம், இரு பதிவுகள் திருத்த மனுக்களையும் உறுதி செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியல் வெளியிடும்போது, அனைத்தும் சரியான முறையில் இருக்கிறதா என சரிபார்க்க வேண்டும். ஓட்டுச்சாவடி அலுவலர்கள் மீது அதிக குற்றச்சாட்டுகள் வருகின்றன. சரியாக பணியாற்றாத ஓட்டுச்சாவடி அலுவலர்களை நீக்க வேண்டும். அவர்களுக்கு போதிய பயிற்சி அளிக்காவிட்டால் தேர்தல் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க, தேர்தல் ஆணையத்துக்கு பரிந்துரைக்கப்படும். இவ்வாறு அவர் அறிவுறுத்தினார்.இதைத்தொடர்ந்து, லயோலா கல்லுாரியில் நடந்த வாக்காளர் பட்டியல் திருத்த முகாமை, பார்வையாளர் அனில் மேஸ்ரம் ஆய்வு மேற்கொண்டார்.