உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சுகாதார நிலையம் இடம் மாற்றும் விவகாரம்: அ.தி.மு.க., கண்டனம்

சுகாதார நிலையம் இடம் மாற்றும் விவகாரம்: அ.தி.மு.க., கண்டனம்

திருவேற்காடு, காடுவெட்டி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் இடம் மாற்றம் செய்யப்பட உள்ளதற்கு, அ.தி.மு.க.,வினர் கண்டனம் தெரிவித்தனர். திருவேற்காடு, காடுவெட்டி, வீரராகவபுரம் பகுதியில், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. ஆவடி - பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்திருப்பதால், திருவேற்காடு நகராட்சி மக்கள் மட்டுமின்றி, சுற்றுவட்டாரத்தில் உள்ள மேல்பாக்கம், கண்ணப்பாளையம் கிராம பகுதி மக்களும் பயனடைந்து வருகின்றனர். கடந்த 2022ல், தேசிய நகர்ப்புற சுகாதார திட்டத்தின் கீழ் சுகாதார நிலையத்தை மேம்படுத்த 1.20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. ஆனால், அப்பணத்தில் புலியம்பேடு பகுதியில் புதிதாக நகர்ப்புற சுகாதார நிலையம் கட்டப்பட்டு வருகிறது. பணிகள் முடிந்ததும், வீரராகவபுரத்தில் செயல்படும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புலியம்பேடு பகுதிக்கு இடம் மாற்றம் செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, 50க்கும் மேற்பட்ட கர்ப்பிணியர் நேற்று முன்தினம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போராட்டம் நடத்தினர். இது குறித்து தகவலறிந்த அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீம், நேற்று காலை ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டு, கர்ப்பிணியர், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின் செய்தியாளர்களிடம் அப்துல் ரஹீம் பேசுகையில், ''அ.தி.மு.க., ஆட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் கட்டப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தி.மு.க., சுகாதார நிலையத்தை இடம் மாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளது. ''பொதுமக்களுக்காக தான் இந்த அரசு இருக்க வேண்டும். அதை மீறி நடக்கும் செயல் கண்டனத்துக்குரியது,” என்று கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !