குண்டர் தடுப்பு சட்டத்தில் ஏர்போர்ட் மூர்த்தி கைது
சென்னை:புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் 'ஏர்போர்ட்' மூர்த்தி, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டார். மயிலாப்பூரில், டி.ஜி.பி., அலுவலகம் எதிரே, புரட்சி தமிழகம் கட்சியின் தலைவர் 'ஏர்போர்ட்' மூர்த்தி மற்றும் வி.சி., கட்சியினர், சில நாட்களுக்கு முன் மோதிக் கொண்டனர். அப்போது, தன்னை தாக்க முயன்ற திலீபன் என்பவரை, மூர்த்தி பிளேடால் கிழித்ததாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக, இரு தரப்பினர் மீதும், மெரினா காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மூர்த்தி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் அவரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். போலீசார் அவரை, ஒரு நாள் தங்கள் காவலில் எடுத்தும் விசாரித்து உள்ளனர். இந்நிலையில், சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவின்படி, மூர்த்தியை நேற்று, குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர்.