உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  புதிய யு - டர்ன் முறையால் அம்பத்துார் திணறல்; பாடி மேம்பாலத்தில் வாகன ஓட்டிகள் தினமும் தவிப்பு

 புதிய யு - டர்ன் முறையால் அம்பத்துார் திணறல்; பாடி மேம்பாலத்தில் வாகன ஓட்டிகள் தினமும் தவிப்பு

அம்பத்துார்: அம்பத்துாரில் ஐந்து இடங்களில் புதிதாக 'யு - டர்ன்' முறை கொண்டு வந்ததால், பாடி மேம்பாலத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அதிவேகமாக வாகனங்கள் செல்வதால், சாலையை கடப்பதில் பாதசாரிகளுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆவடி போலீஸ் கமிஷனரகம் சார்பில், அம்பத்துார் போக்குவரத்து காவல் நிலைய பகுதிகளுக்கு உட்பட்ட பாடி, அம்பத்துார் தொழிற்பேட்டை, டெலிபோன் எக்ஸ்சேஞ்ச், டன்லப், ராமசாமி முதலியார் பள்ளி ஆகிய ஐந்து இடங்களில், சில மாதங்களுக்கு முன், 'யு - டர்ன்' முறை கொண்டு வரப்பட்டது. கொரட்டூர் சிக்னலில் இருந்து பாடி நோக்கி செல்லும் வழியில், வாகன ஓட்டிகள் 'யு - டர்ன்' செய்வதை தடுக்கும் வகையில், அங்கு 'பேரிகேடு'கள் வைக்கப்பட்டுள்ளன. இதனால் வாகன ஓட்டிகள், ஒரு கி.மீ., சென்று, பாடி மேம்பாலத்தின் கீழ் சுற்றிச்செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. உயிர் பலி அபாயம் அதேபோல், பாடி மேம்பாலத்தில் இருந்து, கொரட்டூர் சிக்னல் வரை, சி.டி.எச்., சாலையில் ஒரு கி.மீட்டருக்கு அதிகபடியான போக்குவரத்து நெரிசல், தினமும் ஏற்பட்டு வருகிறது. இந்த துாரத்தை கடக்க, முதலில் 15 நிமிடங்கள் ஆன நிலையில் தற்போது 30 நிமிடங்களுக்கு மேலாகிறது. குறிப்பாக, யு - டர்ன் கொண்டு வரப்பட்டதால், பாதசாரிகள் சாலையை கடப்பதில் சிக்கல் உள்ளது. வேகமாக செல்லும் வாகனங்களில் சிக்கி, உயிர்பலி ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள், யு - டர்ன் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக, ஆவடி போலீஸ் கமிஷனரகத்தில், கடந்த வாரம் நடந்த குறைதீர் முகாமில், பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்தனர். அதில், 'யு - டர்ன் முறையால் பாதசாரிகள் அதிகம் பாதிக்கும் அபாயம் இருக்கிறது. தவிர, நெரிசலும் அதிகரித்துள்ளது. அதனால், இம்முறையை கைவிட்டு, சிக்னல் முறையை கடைபிடிக்க வேண்டும்' என குறிப்பிட்டிருந்தனர். இதையடுத்து, பாடி மேம்பாலம் அருகே, கமிஷனர் சங்கர் ஆய்வு நடத்தினார். நெரிசல் ஏற்படும் பகுதிகளில், போலீசாரை நியமிக்க தற்காலிக நடவடிக்கை எடுத்தார். ஆனாலும், இந்த பாதிப்பு சற்றும் குறையவில்லை. இதற்கிடையே, போக்குவரத்து நெரிசல் அதிகரித்ததாலும், இப்பிரச்னையை சரியாக கையாளாததாலும் அம்பத்துார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பரந்தாமன், மணலிக்கு பணியிடம் மாற்றப்பட்டார். பட்டாபிராம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராஜேஷ், அம்பத்துாருக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில், 'யு - டர்ன்' முறை குறித்து, துணை கமிஷனர் சங்கு என்பவருக்கு, அம்பத்துார் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பரந்தாமன், கடிதம் அளித்துள்ளார். அதில், 'இந்த புதிய நடைமுறையால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் என யாருக்கும் சிக்கல் இல்லை. நெரிசல் எதுவுமின்றி போக்குவரத்து சீராக உள்ளது' என எழுதியுள்ளார். க ர ு த் த ு க ேட்க வ ில்ல ை வாகன ஓட்டிகள் கூறியதாவது: பாடி, லுாகாஸ் அருகே ஏராளமான வணிக வளாகங்கள் உள்ளன. ஆனால் இங்கு, பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப வாகன நிறுத்துமிடம், நடைமேம்பாலம் போன்ற வசதிகள் செய்யப்படவில்லை. இதனால், பாடி சி.டி.எச்., சாலையில் ஒரு கி.மீட்டரை கடக்க 30 நிமிடங்களுக்கு மேல் ஆகிறது. வாகன ஓட்டிகள் சிக்னலில் காத்திருக்கும் அவலம் ஏற்பட்டுள்ளது. பாடி மேம்பாலம் அருகே சாலையை கடக்க நடைமேம்பாலம் வசதி இல்லாததும், வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாததும் நெரிசலுக்கு முக்கிய காரணமாகியுள்ளது. பொதுமக்களிடம் கருத்து கேட்காமல், இந்த யு - டர்ன் முறையை கொண்டு வந்ததால், பாதசாரிகள் தவிக்கும் நிலை உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர். சென்னை மாநகர போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற ஊழியர் பி.சுப்பிரமணி கூறுகையில், ''வணிக வளாகங்களிலிருந்து வாகனங்கள் வெளியேறும் பகுதியிலும் போதிய இடவசதி இல்லை. இதுகுறித்து போக்குவரத்து போலீசார் உரிய ஆய்வு நடத்தி தீர்வு காண வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை