உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தாமதமாக ரயில்கள் இயக்கம் அரக்கோணம் பயணியர் அவதி

தாமதமாக ரயில்கள் இயக்கம் அரக்கோணம் பயணியர் அவதி

சென்னை, ரத்து செய்யப்பட்ட கும்மிடிப்பூண்டி ரயில்கள், சென்ட்ரல் நிலைய நடைமேடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததால், அரக்கோணம், திருவள்ளூர் - சென்னை சென்ட்ரல் மின்சார ரயில்கள் இயக்கத்தில் ஏற்பட்ட தாமதத்தால், பயணியர் அவதிப்பட்டனர். சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி வழித்தடத்தில், பொன்னேரி --- கவரைப்பேட்டை இடையே, ரயில் பாதை பராமரிப்பு பணிகள், நேற்று நடந்தன. இதனால், இந்த தடத்தில், 17 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. ரத்து செய்யப்பட்ட சில ரயில்கள், சென்ட்ரல் புறநகர் ரயில் நிலையத்தில் உள்ள மூன்று நடைமேடைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. எஞ்சியுள்ள இரண்டு நடைமேடைகளில் மட்டுமே, ரயில்கள் இயக்கப்பட்டன. இதனால், அரக்கோணம், திருவள்ளூரில் இருந்து சென்ட்ரல் நோக்கி வந்த ரயில்கள், சென்ட்ரல் நிலையத்தை வந்தடைவதில் 30 நிமிடங்கள் வரை தாமதமாகின. அரக்கோணம், திருவள்ளூரில் இருந்து புறப்படும் மின்சார ரயில்கள் சென்ட்ரல் அருகே வந்தபோது, 15 நிமிடம் நிறுத்தி, அதன்பின், நிலையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டது. இதனால், சென்ட்ரல் நோக்கி வந்த மின்சார ரயில்கள் தாமதமாகவே வந்தடைந்தன. இதனால் பயணியர் அவதிக்குள்ளாகினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை