உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  கரை ஒதுங்கும் கடல்வாழ் உயிரிகளால் ஆபத்து? ஆமைகள் இறப்பிலும் தொடருது மர்மம்

 கரை ஒதுங்கும் கடல்வாழ் உயிரிகளால் ஆபத்து? ஆமைகள் இறப்பிலும் தொடருது மர்மம்

- நமது நிருபர் -: வடசென்னையில், காசிமேடு - திருவொற்றியூர் பகுதி கடற்கரைகளில் ஒதுங்கும், 'புளு பட்டன், புளு பாட்டில், நீல கடல் டிராகன்' போன்ற கடல்வாழ் உயிரிகளால், அரிப்பு போன்ற உடல் பாதைகள் ஏற்படக் கூடும் என, கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தமிழகத்தில், நவ., - பிப்., வரையிலான காலகட்டத்தில், 'ஆலிவ் ரிட்லி' ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக, கடற்கரைகளை நோக்கி படையெடுக்கும். அவற்றில் சில உயிரிழந்து கரை ஒதுங்வது வாடிக்கையாக உள்ளது. இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள் நாளடைவில், அழுகி கடும் துார்நாற்றம் வீசுவதால், கடற்கரை முழுதும் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. திருவொற்றியூர், என்.டி.ஓ., குப்பம் கடற்கரை, காசிமேடு, செரியன் நகர் கடற்கரைகளில் நேற்று, 20 க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து கரை ஒதுங்கின. இந்த ஆமைகள், படகுகள், வலைகள் மற்றும் இஞ்சின்களில் அடிப்பட்டு இறப்பதாக கூறப்படுகிறது. ஆனால், அதுபோன்ற எந்த தடையங்களும், இறந்த ஆமைகளில் தெரியவில்லை. மாறாக, உடல் உப்பிய நிலையில், மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தபடியாக இருப்பது, சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இது ஒருபுறமிருக்க, திருவொற்றியூர், காசிமேடு கடற்கரைகளில், அரியவகை கடல் வாழ் நுண்ணுயிரிகளான, புளு பட்டன், புளு பாட்டில், நீல கடல் டிராகன் போன்றவை, கூட்டமாக குப்பை போல் கரை ஒதுங்கியுள்ளன. இதில், பெரும்பாலானவை இறந்த நிலையிலும், சில மட்டும் உயிருடனும் உள்ளன. ஜெல்லி மீன் போன்ற இந்த வகை கடல் வாழ் உயிரிகளால், மனித உடல்களில் பட்டால், அரிப்பு போன்ற உடல் உபாதைகள் ஏற்பட கூடும் என, கடல் ஆராய்ச்சி நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த விபரம் தெரியாமல், நேற்று புத்தாண்டு கொண்டாட்டமாக, பலர் கடற்கரைகளுக்கு சென்று ஆனந்த குளியல் போட்டனர். கடலில் மாற்றங்கள் நிகழும்போது, இதுபோன்ற உயிரினங்கள் கரை ஒதுங்கும். இவை ஜெல்லிகள் கிடையாது. தனியாக நீந்தாது. நீல கடல் டிராகன், புளு பட்டன், புளு பாட்டில் போன்றவைகள் இறந்து கரை ஒதுங்கினாலும் கூட, கைகளால் தொட வேண்டாம். பார்ப்பதற்கு அழகாக தோன்றினாலும், விஷ தன்மை கொண்டவை. இதனால், அலர்ஜி, வாந்தி, வலி, ஒவ்வாமை போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். புளு பாட்டில் என்பது போர்த்துகீசிய போர்கப்பலில் இருந்து அம்பு எய்தும் வீரரை போல், மீன்களை கொடுக்குகளால் அடித்து விடும். பிற நாடுகளில் நிறைய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. ஆஸ்திரேலியாவில், சில உயிரிழப்பும் பதிவாகியுள்ளது. கடல் வெப்பமயமாதல் உள்ளிட்ட பருவ நிலை மாற்றம் காரணமாகக்கூட, இதுபோன்ற அரியவகை உயிரினங்கள் கரை ஒதுங்கலாம். - வி.எஸ். சந்திரசேகரன், கடல் அறிவியல் நிபுணர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை