ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு கைதியை மற்றவரை போல் சமமாக நடத்த உத்தரவு
சென்னை, பெரம்பூரில், கடந்தாண்டு ஜூலையில், பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.இந்த கொலை வழக்கில், பொன்னை பாலு, ரவுடி நாகேந்திரன், வழக்கறிஞர் ஹிரிஹரன் உள்ளிட்ட 28 பேரை, போலீசார் கைது செய்தனர். வழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்நிலையில், புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்ட தன் மகனை சந்திக்க, சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை; தொலைபேசி வாயிலாக பேசவும் வாய்ப்பு வழங்கவில்லை எனக்கூறி, ஹரிஹரனின் தாயார் கல்பனா மனு தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில், தன் மகனை காண சிறைக்கு செல்லும் போது, வாய்ப்பு மறுக்கப்பட்டதாகவும், மற்ற கைதிகளை போல, தன் மகனையும் சமமாக நடத்த வேண்டும் என்றும் வாதிடப்பட்டது.சிறை நிர்வாகம் சார்பில், ஹரிஹரனின் பாதுகாப்பு கருதியே, அதிக பாதுகாப்பு கொண்ட சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், அவரை சந்திக்க உறவினர்கள் அனுமதிக்கப்படுவதாகவும், தொலைபேசி, வீடியோ கால் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் பதிலளிக்கப்பட்டது.சிறை நிர்வாகம் தரப்பு வாதத்தை பதிவு செய்த நீதிபதி, மற்ற கைதிகளை போல, சட்டத்துக்கு உட்பட்டு வீடியோ காலில் பேசுவது உள்ளிட்ட அனைத்து வசதிகளையும், ஹரிஹரனுக்கு அளிக்க வேண்டும். மனுதாரர் உட்பட அனைத்து உறவினர்களையும், பார்வையிடும் நேரத்தில் அனுமதிக்க வேண்டும்.மற்ற கைதிகளை போல, மனுதாரரின் மகனும் சமமாக நடத்தப்படுகிறாரா என்பதை, சிறைத்துறை டி.ஜி.பி., உறுதி செய்ய வேண்டும், என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.