பட்டாக்கத்தியுடன் நான்கு ரவுடிகள் கைது
புழல்: புழல், கதிர்வேடு - மதுரவாயல் செல்லும் மேம்பாலத்தில், நேற்று அதிகாலை புழல் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். சந்தேகப்படும்படி நின்று பேசிக் கொண்டிருந்த நான்கு பேரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர்.இதில், காட்டுப்பாக்கம் வழக்கறிஞர் வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த இருவர், சரியாக வாடகை தராமல், வீட்டை காலி செய்யாமல் ஏமாற்றி வந்தனர். அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனால், வீட்டை காலி செய்ய வழக்கறிஞர் அடியாட்களை ஏவி, அவர்களுக்கு மிரட்டல் விடுக்க திட்டமிட்டது தெரிந்தது.பிடிபட்டவர்கள் வியாசர்பாடியைச் சேர்ந்த வழக்கறிஞர் அஜித்குமார், 29, கொடுங்கையூரைச் சேர்ந்த ரஞ்சித் குமார், 25, அன்பரசன், 18, பழனி, 65, ஆகியோர் என்பது தெரிந்தது.அவர்களை கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.