வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சில புகைப்படங்கள் உண்மையாக இல்லாமல் artificial intelligence ஐத்தானே பயன்படுத்துகின்றீர்கள். விபத்துக்கள், காவலர்களின் புகைப்படங்கள்..
திப்ருகர்: 'இன்ஸ்டாகிராம்' சமூக ஊடகத்தில், சமீப நாட்களாக அதிகளவு பகிரப்பட்ட, 'பேபிடால் ஆர்ச்சி' என்ற கணக்கு, போலியானது என, போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. அசாமைச் சேர்ந்த பெண்ணின் புகைப்படத்தை, இளைஞர் ஒருவர் தவறாக பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது.குழப்பம்
உலகம் முழுதும் ஏ.ஐ., எனப்படும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அனைத்து துறைகளிலும், இத்தொழில்நுட்பத்தின் பயன்பாடு இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. எனினும், இதில் எது உண்மை, எது போலி என்பதை கண்டறிய முடியாமல் பொதுமக்கள் குழப்பம் அடைகின்றனர்.இந்த வரிசையில், 'இன்ஸ்டாகிராம்' சமூக ஊடகத்தில், 'பேபிடால் ஆர்ச்சி' என்ற வீடியோ பதிவு சமீபத்தில் மிகவும் பிரபலமடைந்தது. இதில், ரோமானிய பாடகி கேத்லின், ஸ்பானிஷ் மொழியில் பாடி பிரபலமான, 'டேம் உன் க்ர்ர்ர்' பாடலை, புடவை அணிந்தபடி ஒரு பெண் பாடுவது போல் அமைந்திருந்தது. இது, இன்ஸ்டாவில் அதிகளவு பகிரப்பட்டது. பேபிடால் ஆர்ச்சி என்கிற அர்ச்சிதா புஹான் என பெயரிடப்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்கில், இந்த வீடியோ பதிவேற்றப்பட்ட ஒரு வாரத்திற்குள், 14 லட்சம் பேர் பின்தொடர்ந்தனர்.தொடர்ந்து ஆபாசமாக சித்தரித்து ரீல்ஸ்கள் இக்கணக்கில் பதிவிட்டு வந்த நிலையில், அமெரிக்காவின் பிரபல ஆபாச பட நடிகை கேந்த்ரா லஸ்ட் என்பவருடன் அப்பெண் எடுத்த புகைப்படம் வெளியானது.இது இன்ஸ்டா பயனர்களை, அர்ச்சிதா புஹானின் கணக்கின் பக்கம் ஈர்த்தது. இதன் காரணமாக, அக்கணக்கை பின்தொடர்வோரின் எண்ணிக்கை 80 லட்சமாக அதிகரித்தது.வழக்குப்பதிவு
இந்நிலையில், அர்ச்சிதா புஹான் என்ற இன்ஸ்டா கணக்கில் பதிவிடப்பட்ட பெண், ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட தோற்றம் எனவும், ஆனால், அதற்கு பயன்படுத்தப்பட்ட உருவப்படம், நிஜ பெண்ணின் புகைப்படம் எனவும் தெரியவந்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அசாமின் திப்ருகரைச் சேர்ந்த திருமணமான பெண்ணின் புகைப்படத்தை, இன்ஸ்டா கணக்கில் தவறாகவும், மோசடியாகவும் பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது.இது தொடர்பாக அப்பெண் அளித்த புகாரின்படி, அசாம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, அசாமின் தின்சுகியா பகுதியைச் சேர்ந்த பிரதீம் போரா என்ற மெக்கானிக்கல் இன்ஜினியர், இந்த மோசடியில் ஈடுபட்டதை போலீசார் கண்டறிந்தனர்.இதற்காக 'டீப் பேக்' மற்றும் 'ஏ.ஐ.,' தொழில்நுட்பத்தின் வாயிலாக, இக்குற்றச்செயலில் அவர் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவரை அசாம் போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து திப்ருகர் மாவட்ட எஸ்.பி., ஷிஷல் அகர்வால் கூறியதாவது:இன்ஸ்டாகிராம் கணக்கில் பயன்படுத்திய எண்ணில், பிரதீம் போராவின் பெயர் இணைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தோம். இவர், டில்லியில் பணியாற்றி வருகிறார். இதற்கிடையே, இன்ஸ்டாகிராமில், கடந்த 2020ல் இந்த கணக்கை போரா துவக்கினார். பேபிடால் ஆர்ச்சி, அமிரா இஸ்தாரா என இரண்டு பெயர்களில் இக்கணக்கை அவர் பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் ஒரே ஒரு புகைப்படத்தை மட்டும் வைத்து, மார்பிங் மற்றும் ஏ.ஐ., தொழில்நுட்பத்தின் வாயிலாக பேபிடால் ஆர்ச்சி என்ற பெண் கதாபாத்திரத்தை போரா உருவாக்கியுள்ளார்.புகார் அளித்த பெண்ணுக்கும், போராவுக்கும் இடையே நன்கு பழக்கம் இருந்துள்ளது. இடையே ஏற்பட்ட மனகசப்பு காரணமாக அப்பெண்ணை பழிவாங்கும் நோக்குடன், அவரது புகைப்படத்தை போரா பயன்படுத்தியுள்ளார். எனினும், இக்கணக்கு துவங்கிய ஐந்து நாட்களிலேயே 3 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்ததால், தொடர்ந்து வருவாயை ஈட்ட எண்ணி, இக்கணக்கை பயன்படுத்தி வந்துள்ளார்.இதற்காக 'லிங்ட்ரீ' எனப்படும் சமூக வலைதளம் வாயிலாக சந்தாதாரர்களை சேர்த்துஉள்ளார். இதன் வாயிலாக, வருவாயை பெருக்கி உள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
சில புகைப்படங்கள் உண்மையாக இல்லாமல் artificial intelligence ஐத்தானே பயன்படுத்துகின்றீர்கள். விபத்துக்கள், காவலர்களின் புகைப்படங்கள்..