பெங்களூரு போதை மாத்திரை சென்னையில் விற்ற 5 பேர் கைது
கே.கே.நகர், விருகம்பாக்கம், வெங்கடேஸ்வரா நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்படை போலீசார், 28ம் தேதி அங்கு சோதனை மேற்கொண்டனர். இதில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து, 1.68 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 42 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதை மாத்திரை மற்றும் 13 ஊசிகள் இருந்தன. அவற்றை கைப்பற்றி, போதை பொருள் விற்பனையில் ஈடுபட்ட, கோவூர் சக்தி நகரை சேர்ந்த யோகா ஆசிரியர் ராஜேஷ் குமார், 27, சாலிகிராமம் இந்திராகாந்தி தெருவை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் சாய் பாலாஜி, 26 ஆகிய இருவரை கே.கே.நகர் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், ராஜேஷ் குமார், பெங்களூரில் உள்ள நண்பர் அருண் என்பவர் வாயிலாக, மெத் ஆம்பெட்டமைன் போதை மாத்திரைகளை வாங்கி வந்து, விற்பனை செய்தது தெரியவந்தது.இதையடுத்து பெங்களூரு சென்ற தனிப்படை போலீசார், அங்குள்ள விஜினபுரா சாலையை சேர்ந்த அருண் குமார், 30, ரிஸ்வான், 28, சையது நுார், 29, ஷாரூக் பாஷா, 29, நிதின், 29 ஆகிய ஐந்து பேரை கைது செய்து, கே.கே., நகர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரிக்கின்றனர். அவர்களிடம் இருந்து, 50 கிராம் மெத் ஆம்பெட்டமைன் போதை மாத்திரை பறிமுதல் செய்யப்பட்டது.