கிண்டி - கோயம்பேடு சாலையில் பைக் ரேஸ்: இருவர் கைது 30க்கும் மேற்பட்டோருக்கு வலை
சென்னை: சென்னை கிண்டி -- கோயம்பேடு 100 அடி சாலையில், நள்ளிரவில் பைக் ரேசில் ஈடுபட்ட இளைஞர்களில் இருவர் கைது செய்யப்பட்டனர். 30க்கும் மேற்பட்டோரை போலீசார் தேடி வருகின்றனர். சென்னையின் பிரதான சாலைகளில், இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபடுவது வழக்கமாகி விட்டது. ஒவ்வொரு முறையும் போலீசார் பைக் ரேசில் ஈடுபடுவோரை, உயிரை பணயம் வைத்து போலீசார் மடக்கி பிடித்து வாகனங்களை பறிமுதல் செய்வதுடன், கைது நடவடிக்கையும் மேற்கொள்கின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கோயம்பேடு - கிண்டி 100 அடி சாலையில் பைக் ரேசில் ஈடுபட்டனர். அப்போது சிலர், இருசக்கர வாகனத்தின் ஸ்டான்டுகளை சாலையில் தேய்த்தபடி, அதிக சத்தத்துடன் நெருப்பு பறக்கவிட்டுச் சென்றனர். இதனால், மற்ற வாகன ஓட்டிகள் பீதியடைந்தனர். இதை அறிந்த கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், காசி திரையரங்கம் அருகே இரும்பு தடுப்புகள் அமைத்து பைக் ரேசில் ஈடுபட்டவர்களில் இருவரை மடக்கி பிடித்தனர். பின் வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், இருவருக்கும் தலா, 1,000 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், பைக் ரேசில் ஈடுபட்டவர்கள் யார் யார் என்பது குறித்து, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சி பதிவுகளை வைத்து, 30க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர்.