3 இடங்களில் வெடிகுண்டு மிரட்டல்
கோயம்பேடு: விஜயகாந்த் வீடு, கட்சி தலைமை அலுவலகம் மற்றும் மாநகராட்சி பூங்காவிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று காலை மின்னஞ்சல் வந்தது. அதில், கோயம்பேடில் உள்ள தே.மு.தி.க., தலைமை அலுவலகத்திற்கும், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் வீட்டிற்கும் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. போலீசார், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் குழுவினர், மேற்கண்ட அலுவலகம், வீடுகளில் ஒரு மணி நேரம் சோதனை நடத்திய பின், மிரட்டல் வெறும் புரளி என, போலீசார் தெரிவித்தனர். வளசரவாக்கம் மண்டலம், மதுரவாயல், அஷ்டலட்சுமி நகரில் உள்ள மாநகராட்சி பூங்காவிற்கும், நேற்று, வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. மதுரவாயல் போலீசார் விசாரித்து, நொளம்பூரில் துணிகளுக்கு இஸ்திரி போடும் தொழில் செய்யும் விக்னேஷ்வரனை, 40, கைது செய்தனர். புகையிலை போதை பொருட்கள் கடைகளில் கிடைக்காததால், போலீசாரை அலைக்கழிக்க இவ்வாறு செய்ததாக கூறியுள்ளார்.