உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துாய்மை பணியாளர்களுக்கான காலை உணவு...  நிறுத்தம்!   மற்ற நேர உணவும் தரமில்லை என குற்றச்சாட்டு

துாய்மை பணியாளர்களுக்கான காலை உணவு...  நிறுத்தம்!   மற்ற நேர உணவும் தரமில்லை என குற்றச்சாட்டு

- நமது நிருபர் - துாய்மை பணியாளர்களுக்கான உணவு திட்டத்தில், காலை உணவு வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது. மதியம் மற்றும் இரவில் வழங்கப்படும் உணவிலும் தரம் இல்லை என, துாய்மை பணியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சென்னை மாநகராட்சி ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் குப்பை கையாளும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, துாய்மை பணியாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை சமாதானப்படுத்தும் வகையில், துாய்மை பணியாளர்களுக்கான ஒருநாள் கூலி, 585 ரூபாயில் இருந்து, 761 ரூபாயாக உயர்த்தப்பட்டது. துாய்மை பணியாளருக்கும் மூன்று ஷிப்டுகளிலும் உணவு வழங்கும் திட்டம் துவக்கப்பட்டது. கடந்த நவ., 15ல், முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை துவக்கி வைத்தார். அப்போது, மாநகராட்சி முறையாக திட்டமிடாததால், பல இடங்களில் சரியான நேரத்திற்கு உணவு வழங்கப்படவில்லை. முதல் ஓரிரு நாட்கள், 60 சதவீதம் பேருக்கு மட்டுமே உணவு வழங்கப்பட்டது. மற்றவர்கள் உணவு கிடைக்காமல் வீடு திரும்பினர். உணவு தரமாக இல்லாததால், பலர் வேண்டாம் எனக்கூறி, ஏமாற்றத்துடன் வீடு திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே, சென்னை மாநகராட்சியில் உள்ள துாய்மை பணியாளர்கள், 31,373 பேரில், காலை உணவு, 5,418 பேருக்கு வழங்க வேண்டும். ஆனால், காலையிலேயே உணவு தயாரித்து வழங்க முடியாததால், காலை உணவு நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு மதிய உணவாக வழங்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து, துாய்மை பணியாளர்கள் கூறியதாவது: துாய்மை பணியாளர்கள் மூன்று ஷிப்டுகளில் பணியாற்றி வருகிறோம். காலை ஷிப்டில் 6:00 மணிக்கு வருகின்றனர். காலை உணவை மாநகராட்சி தருவதில்லை. பணியை முடித்து மதியம் 1:30 மணிக்கு செல்லும்போது தருகின்றனர். அதனால் எந்த பயனும் இல்லை. அதுவும் சரியில்லாததால் குப்பையில்தான் போடுகிறோம். பணியில் இருக்கும்போதுதான் உணவு தேவை. எனவே, ஹோட்டல்களில் பணம் கொடுத்து உணவு வாங்கி சாப்பிடுகிறோம். கடந்த வாரம் பெரும்பாலான இடங்களில், 'தரமில்லாத உணவு எங்களுக்கு வேண்டாம்' என, பலரும் போர்க்கொடி உயர்த்தி, வாங்காமல் சென்று விட்டனர். அதன்பின், தற்போது ஓரளவு சாப்பிடும் வகையில் உணவுகள் வழங்கப்படுகிறது. இவை எத்தனை நாட்கள் நீடிக்கும் என தெரியவில்லை. தரமில்லை, சரியான நேரத்தில் உணவு கிடைக்கவில்லை என்பதால், இத்திட்டத்தை யாரும் விரும்பவில்லை. உணவுக்கான தொகையை கொடுத்தாலே, நாங்களே நல்ல உணவு சாப்பிடுவோம். இதில், முதல்வர்தான் முடிவெடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர். காலை உணவு நிறுத்தம், தரமற்ற உணவு வினியோகம் குறித்து, மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, பதில் ஏதும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Vasan
டிச 29, 2025 21:08

தூய்மை பணியாளர்களுக்கு மட்டுமன்றி, தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் 3 வேலை சாப்பாடு கொடுத்தால், ஒவ்வொரு வீட்டிலும் சமைக்கும் நேரம் மிச்சமாகும்.


N S
டிச 29, 2025 09:43

"காலை உணவு நிறுத்தம், தரமற்ற உணவு வினியோகம் குறித்து, மாநகராட்சி உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது ......," பதில் - இதுதான் தரணி போற்றும் தன்னிகரில்லா திராவிட மடல் தந்த "அப்பா" வின் வழிகாட்டுதலில் நடக்கும் திட்டம். வேறு ஏதும் தெரிவிக்க இல்லை.


Mani . V
டிச 29, 2025 07:43

போட்டோ ஷூட்டுக்காகவும், தூய்மைப் பணியாளர்களின் பிரச்சினையை திசை திருப்பவும் போட்ட நாடகத்தை உண்மை என்று நம்பும் உங்களை நினைத்தால் பரிதாபம் தான் மிஞ்சுகிறது.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ