கடன் வாங்கியாவது படகு வாங்குங்கள்: அன்புமணி
சென்னை, ''மழைக் காலம் வரப்போகிறது. உங்களை பாதுகாத்துக் கொள்ள தயார் செய்து கொள்ளுங்கள். கடன் வாங்கியாவது, படகு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்,'' என, அன்புமணி பேசினார். பா.ம.க., தலைவர் அன்புமணி, 'உரிமை மீட்க, தலைமுறை காக்க' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சென்னை தங்கசாலை மணிக்கூண்டு பகுதியில் நடைபயணம் மேற்கொண்ட அவர், அங்கு நடந்த கூட்டத்தில் பேசியதாவது: தி.மு.க., என்பது அரசியல் கட்சி அல்ல. ஒரு குடும்பத்திற்காக நடத்தப்படும் கார்ப்பரேட் நிறுவனம். கோயம்பேடு பஸ் நிலையம் இருந்த இடத்தை, தனியார் நிறுவனம் வணிக வளாகம் கட்ட தாரைவார்க்க அமைச்சர் சேகர்பாபு திட்டமிடுகிறார். அங்கு பல லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், பசுமை பூங்கா அமைக்க வேண்டும் என்பதற்காக பா.ம.க., போராடி வருகிறது. கடந்த 1996ல் மேயராக பொறுப்பேற்ற ஸ்டாலின், சென்னையை சிங்கப்பூராக மாற்றுவேன் என்றார். ஆனால், ஸ்டாலின் முதல்வரான பிறகும் சென்னை சாக்கடை சென்னையாகவே உள்ளது. மழைக் காலம் வரப்போகிறது. உங்களை பாதுகாத்துக் கொள்ள தயார் செய்து கொள்ளுங்கள். கடன் வாங்கியாவது, படகு வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.