உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் தலையிட முடியாது: பசுமை தீர்ப்பாயம்

 உயர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கில் தலையிட முடியாது: பசுமை தீர்ப்பாயம்

சென்னை: 'உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில், பசுமை தீர்ப்பாயம் தலையிட முடியாது' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. சென்னை அடுத்த செங்குன்றம் பகுதியில் குளங்கள், சாலையோரங்களில் சட்டவிரோதமாக குப்பை கொட்டப்படுகிறது. பல நேரங்களில் குப்பை எரிக்கப்படுகிறது. இதனால் பாடியநல்லுார், பன்னிவாக்கம், சோத்துப்பாக்கம் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, அங்கு குப்பை கொட்டுவதை தடுக்க, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிட வேண்டும் என, ஸ்ரீபாலாஜி நகர் பொதுநல சங்கம் சார்பில், தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் பிரசாந்த் கர்கவா ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: கடந்த, 2016 திடக்கழிவு மேலாண்மை விதிகளில், நீர்நிலைகளில் திடக்கழிவுகள் கொட்டப்படுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், 2023 முதல் செங்குன்றம் பகுதி உள்ளாட்சி அமைப்புகளால் சேகரிக்கப்படும் குப்பை, சட்ட விரோதமாக நீர்நிலைகளில் கொட்டப்பட்டு வருகிறது. இதை நிறுத்த உத்தரவிட வேண்டும் என, ஸ்ரீபாலாஜி நகர் பொதுநல சங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உயர் நீதிமன்றத்தில் எதற்காக வழக்கு தொடரப்பட்டுள்ளதோ, அதை நோக்கத்திற்காக பசுமை தீர்ப்பாயத்திலும் மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார். உயர் நீதிமன்ற விசாரணையில் உள்ள வழக்கை விசாரித்து, தீர்ப்பாயம் உத்தரவிட முடியாது. உயர் நீதிமன்றமும், தீர்ப்பாயமும் மாறுபட்ட உத்தரவுகளை பிறப்பித்தால், எந்த உத்தரவைப் பின்பற்றுவது என்பதில் அதிகாரிகளுக்கு சிக்கல் ஏற்படும். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை