சென்னை:ஜே.பி.ஜே., சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்வதாகக் கூறி, 93 லட்ச ரூபாய் மோசடி செய்த தம்பதியினரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.சென்னை, ஆவடி, திருவள்ளுவர் நகர், நண்பர் தெருவைச் சேர்ந்தவர் முரளி. இவரது மனைவி பிரபா, 38. அம்பத்தூர், இந்தியன் பாங்க் காலனி 3 வது பிரதான சாலையைச் சேர்ந்த சண்முகம் மற்றும் அவரது மனைவி கமலாபாய் ஆகிய இருவரும், 2007ம் ஆண்டு பிரபாவிற்கு அறிமுகமாயினர். இவர்கள் இருவரும், ஜே.பி.ஜே., சிட்டி டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என, பிரபாவிடம் ஆசை வார்த்தை காட்டினர். இதை நம்பிய பிரபாவும், 2007ம் ஆண்டு முதல் இந்தாண்டு மே வரை, 94 லட்ச ரூபாய் வரை கொடுத்துள்ளார்.இந்நிலையில், சமீபத்தில் ஜே.பி.ஜே., நிறுவனத்தில் ஆய்வு செய்த போது, அதில், பிரபா பெயரில் ஒரு லட்ச ரூபாய் மட்டுமே முதலீடு செய்யப்பட்டது தெரிந்தது. தொடர்ந்து, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், பிரபா கடந்த மாதம் புகார் அளித்தார். இதுகுறித்து, சென்னை மத்திய குற்றப்பிரிவில் வழக்கு பதியப்பட்டு, துணை கமிஷனர் ராதிகா, கூடுதல் துணை கமிஷனர் மகேஷ்வரன் உத்தரவின்படி, இன்ஸ்பெக்டர் காளிதாஸ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.தனிப்படை போலீசார், சண்முகம் தம்பதியினரை தேடிச் சென்ற போது, அவர்கள் தலைமறைவாகி விட்டனர். தொடர்ந்து கடந்த ஒரு மாதமாக தேடி வந்த நிலையில், அவர்கள் இருவரும் அம்பத்தூர் பஸ் நிலையத்தில், வெளியூர் செல்வதற்காக காத்திருப்பதாக தனிப்படைக்கு தகவல் கிடைத்து, இருவரையும் நேற்று முன்தினம இரவு கைது செய்தனர்.