| ADDED : நவ 25, 2025 04:51 AM
சென்னை: சென்னை மாவட்டத்தில் உள்ள, 16 சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த பணி தொடர்பாக, மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான குமரகுருபரன் தலைமையில், நேற்று நடந்தது. இதில், இறந்தோர், இடம் பெயர்ந்தோர் பெயர்களை நீக்கம் செய்யும் வகையிலான படிவங்கள் குறித்து, அரசியல் கட்சிகளுக்கு விளக்கப்பட்டது. கூட்டத்திற்கு பின், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் கூறியதாவது: இந்த கூட்டம் காலம் கடந்து நடந்த கூட்டம். வாக்காளர் விண்ணப்ப படிவங்கள் பதிவேற்றம் செய்வதில் சிக்கல் உள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ளவர்களுக்கு, முறையாக விண்ணப்ப படிவம் வழங்கப்படவில்லை. இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர் குறித்த விபரங்களை நிரப்பும் படிவங்கள் தாமதமாக தரப்பட்டுள்ளன. ஏற்கனவே அளித்த புகார்கள் மீது நடவடிக்கை இல்லை. வாக்காளர் பட்டியல் விபரங்கள் தி.மு.க.,வினருக்கே முதலில் தரப்படுகிறது. எனவே, இப்பணிகளை கண்காணிக்க மத்திய தேர்தல் பார்வையாளரை நியமிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். மாவட்ட தேர்தல் அலுவலர் குமரகுருபரன் கூறுகையில், ''சென்னை மாவட்டத்தில், 14 லட்சம் படிவங்கள் பூர்த்தி செய்து பெறப்பட்டுள்ளன. வாக்காளர்களிடம் படிவம் பெறுவதில், மாநகராட்சி முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது,'' என்றார்.