தண்டையார்பேட்டை: நவ. 17-: தண்டையார்பேட்டை மண்டலத்தில், மாதாந்திர மண்டல குழு கூட்டம், தலைவர் நேதாஜி கணேசன், மண்டல அதிகாரி ராஜ்குமார் தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில் தி.மு.க., - இந்திய கம்யூ., - வி.சி., கட்சி கவுன்சிலர்கள், சுகாதார அதிகாரிகள், மண்டல அலுவலர்கள், குடிநீர் வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் 11.88 கோடி ரூபாய் மதிப்பில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன. தீர்மானங்கள் மற்றும் வார்டு பிரச்னைகள் குறித்து கவுன்சிலர்கள் பேசியதாவது: தேவி கதிரேசன் 39வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: வார்டில் கொசு தொல்லை அதிகரித்துள்ளது. பணியாளர்கள் கொசு மருந்து அடிக்க வருவதில்லை. கொசு மருந்து அடித்தாலும் கொசுக்கள் சாவதில்லை. ஆர்.கே.நகர் பகுதியில் மின் கேபிள், மின் தடை பிரச்னை அதிகரித்துள்ளது. மின் வாரியத்தில் அதிகாரிகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் கொடுக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படுதில்லை. சர்மிளா காந்தி 34வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: எனது வார்டில், 43 பேட்டரி வாகனங்கள் உள்ளன. ஆனால், போதிய சார்ஜ்ஜிங் பாயின்ட் இல்லை. மழைக்காலம் என்பதால், பேட்டரி வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்த ஷெட் அமைத்து தர வேண்டும். ரேணுகா 42வது வார்டு இ.கம்யூ., கட்சி கவுன்சிலர்: வார்டில், குடிநீர், கழிவுநீர் பிரச்னைகள் குறித்து புகார் தெரிவிக்க எந்த அதிகாரியை தொடர்பு கொண்டாலும், மொபைல்போனை எடுப்பதில்லை. ஆரணி ரங்கன் தெருவில், பொதுமக்களை தொடர்ந்து ஒரு நாய் கடிப்பது குறித்து, கால்நடை மருத்துவரிடம் புகார் தெரிவித்தேன். இதுவரை அந்த நாயை பிடிக்கவில்லை. அதிகாரியை கேட்டால், 'அது ஓடி விட்டது' என்கிறார். அப்பகுதி மக்கள் நாய் இங்கேயே சுற்றி வருகிறது என புகார் தெரிவிக்கின்றனர். கோபிநாத் 45வது வார்டு வி.சி., கவுன்சிலர்: வியாசர்பாடி, சாஸ்திரி நகரில் குடியிருப்புகள் நடுவே தெருவை ஆக்கிரமித்து நடத்தப்படும் மீன் சந்தையால் மக்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர். அதை அகற்ற 50 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். மேலும், வியாசர்பாடி, சாஸ்திரி நகரில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான 4 ஏக்கர் இடத்தில் உள்ள பழைய கட்டடத்தை இடித்து விட்டு, அங்கு மீன் சந்தை அமைக்கலாம். இதன் மூலம், 50 ஆண்டு கால பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.