முதல்வர் கோப்பை ஜிம்னாஸ்டிக் சென்னை வீராங்கனை முதலிடம்
பதக்கப் பட்டியலில் தொடர்ந்து சென்னை முன்னிலைசென்னை: முதல்வர் கோப்பை மாநில ஜிம்னாஸ்டிக் போட்டியில், சென்னை வீராங்கனை முத்தமிழ்செல்வி முதலிடத்தை பிடித்து அசத்தினார். பதக்கப் பட்டியலில் நேற்று வரை, சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் கோப்பை மாநில போட்டிகள், மாவட்டம்தோறும் நடந்து வருகின்றன. கல்லுாரி பிரிவுக்கான ஜிம்னாஸ்டிக் போட்டி, வேளச்சேரியில் நேற்று நடந்தது. அதில் பெண்களில், சென்னை வீராங்கனை முத்தமிழ்செல்வி, 8.75 புள்ளிகள் பெற்று தங்கம் வென்றார். ஈரோடு வீராங்கனை பூவிழி, 7.30 புள்ளிகளில் வெள்ளியும், விழுப்புரம் கலையரசி வெண்கலமும் வென்றார். ஆண்களில், 'ஆர்ட்டிஸ்டிக் ஜிம்னாஸ்டிக் டேபிள் வால்ட்' பிரிவில், கோவை வீரர் தினேஷ் கார்த்திக், சென்னையின் ஆகர்ஷ் மற்றும் தருண், முறையே முதல் மூன்று இடங்களை வென்றனர். பளு துாக்குதல் பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நடந்த கல்லுாரி பிரிவு, 48 கிலோ பிரிவில், வேலுார் மமிதா மொத்தம் 128 கிலோ துாக்கி தங்கமும், மதுரை ரோகிணி 127 கிலோ துாக்கி வெள்ளியும், கோவை அபித்ராஜ் 126 கிலோ துாக்கி வெண்கலமும் வென்றனர். வாள்வீச்சு நேரு விளையாட்டு அரங்கில், கல்லுாரி பிரிவில் 'பாயில்' வகை சண்டையில் சென்னை ஜாய்ஸ் அஷிதா தங்கம், சென்னை திவ்யதர்ஷினி வெள்ளி மற்றும் சென்னை சதுர்யா, திருச்சி லீலா இருவரும் வெண்கலம் வென்றனர். நேற்று மாலை வரை நடந்த போட்டிகள் முடிவில், பதக்கப் பட்டியலில், சென்னை ஒன்பது தங்கம், ஏழு வெள்ளி, ஐந்து வெண்கலம் என, 21 பதக்கங்களுடன் முன்னிலையில் உள்ளது. அடுத்தப்படியாக மொத்த பட்டியலில் சேலம் - 14, கோவை - 9, துாத்துக்குடி - 10 என முறையே அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. போட்டிகள், தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் நடக்கின்றன.