சென்னை மாநகராட்சியில் கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகளை, பொதுமக்கள் மொபைல் போனில் அழைத்தால், தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ளனர். கட்சி நிகழ்ச்சிகளில் மட்டுமே அவர்களை பார்க்க முடிவதால், வார்டு பிரச்னைகள் குறித்து புகார் தெரிவிக்க முடியாமல், பொதுமக்கள் தவிக்கின்றனர்.சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில், 200 வார்டுகள் உள்ளன. இதில், மேயர், துணை மேயர், நிலைக்குழு தலைவர்கள், மண்டல குழு தலைவர்கள், நிலைக்குழு உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் என்ற அடிப்படையில் உள்ளனர்.அதேபோல், கமிஷனர், இணை, துணை கமிஷனர்கள், தலைமை பொறியாளர்கள், கண்காணிப்பு பொறியாளர், செயற்பொறியாளர், உதவி பொறியாளர்கள் என்ற வகையில், மாநகராட்சி அதிகாரிகளும் பணியாற்றி வருகின்றனர்.இதில், கவுன்சிலர்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு பணிகளுக்காக, ஒவ்வொரு ஆண்டும் தலா, 60 லட்சம் ரூபாய் நிதியாக, மாநகராட்சி வழங்குகிறது. அதேபோல், மேயர் மேம்பாட்டு நிதியாக, மூன்று கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.மேயருக்கு மாதம் 30,000; துணை மேயருக்கு, 15,000; கவுன்சிலர்களுக்கு தலா, 10,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்பட்டு வருகிறது.அதேபோல், மாநகராட்சியில் உள்ள, 17,000க்கும் மேற்பட்ட அதிகாரிகள், பணியாளர்களுக்கு ஆண்டுக்கு, 2,000 கோடி ரூபாய் வரை மாநகராட்சி சம்பளமாக வழங்குகிறது.மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகளை பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில், வார்டு எண்களை முடிவாக கொண்ட, ஒரே மாதிரி மொபைல்போன் எண்கள் வழங்கப்பட்டுள்ளன.பொதுமக்கள் தங்கள் குறைகளை தீர்ப்பதற்கு எளிதாக கவுன்சிலர்கள், அதிகாரிகளை அணுகி தீர்வு ஏற்படுத்தும் வகையில், அனைத்து கவுன்சிலர்களுக்கும், 'டேப்' எனும் கையடக்க கணினி வழங்கப்பட்டுள்ளது. அதற்கான மொபைல் போன் கட்டணத்தையும் மாநகராட்சியே செலுத்தி வருகிறது.மாநகராட்சியில் மக்கள் பிரதிநிதிகள் முதல் அதிகாரிகள் வரை, மக்களுக்கு சேவையாற்றவும், அவர்கள் தெரிவிக்கும் புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், வளர்ச்சி பணிகளை மேம்படுத்தவும், இவ்வளவு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.மாநகராட்சியில், நான்கு கவுன்சிலர்கள் உயிரிழந்த நிலையில் தற்போது, 196 கவுன்சிலர்கள் பதவியில் இருக்கின்றனர். இவர்களின் பெரும்பாலானோருக்கு வழங்கப்பட்ட, மாநகராட்சி மொபைல் போன் எண்கள் பயன்பாட்டில் இல்லை.பயன்பாட்டில் இருக்கும் எண்களை பெரும்பாலான நேரங்களில் யாரும் எடுப்பதில்லை. சில நேரங்களில் எடுத்தாலும், பெண் கவுன்சிலர்களாக இருந்தால், அவர்களின் கணவர், உறவினர்கள், உதவியாளர்கள் என்ற அடிப்படையிலேயே பொதுமக்கள் பேச வேண்டியுள்ளது.அதிகாரிகள் மட்டத்தில், அவர்களது போனில் பதிவு செய்யப்படாத எந்த அழைப்பையும் எடுக்காமல் புறக்கணிக்கின்றனர்.அதேநேரம், அனைத்து கவுன்சிலர்கள், அதிகாரிகளும் தனிப்பட்ட மொபைல் எண்களை வைத்துள்ளனர். அந்த எண்களில் அழைத்தால், பொதுமக்களை கடித்து கொள்வதுடன், நேரில் வந்து பார்க்கும்படி கூறி அழைப்பை துண்டிகின்றனர்.மாநகராட்சியில் ஒருசில கவுன்சிலர்கள், அதிகாரிகள் தவிர பெரும்பான்மையானோர் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருப்பதால், புகார் உள்ளிட்ட தேவைகளுக்கு, பொதுமக்கள் எளிதில் அணுக முடியாத நபர்களாக உள்ளனர்.இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:அதிகாரிகளை, அலுவல் சார்ந்த நிகழ்ச்சிகளிலும், கவுன்சிலர்களை கட்சி சார்ந்த நிகழ்வுகளில் மட்டுமே பார்க்க முடிகிறது. மற்ற நேரங்களில், வார்டுக்கு வருவதில்லை.குறிப்பாக, பெண் கவுன்சிலர்கள் என்றால், ஒருசிலரை தவிர மற்றவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தான், நிழல் கவுன்சிலர்களாக உள்ளனர். அவர்கள் பொதுமக்களை மதிப்பது கூட கிடையாது.மாநகராட்சி சார்பில் அதிகாரிகளுக்கும், கவுன்சிலர்களுக்கும் வழங்கப்பட்ட எண்களில் பொதுமக்கள் அழைத்தால் எடுக்காதபோது, அதற்காக மாநகராட்சி நிர்வாகத்தில் ஒதுக்கும் நிதி வீணாகிறது.அவர்களின் தனிப்பட்ட காரணங்களுக்காக, மாநகராட்சி லட்சக்கணக்கில் மொபைல் போன் கட்டணத்தை செலுத்துகிறதா என்ற கேள்வி எழுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.
முதல்வர்
அறிவுரையையும் கேட்கவில்லைசட்டசபை தேர்தல் வர உள்ள நிலையில், அனைத்து அமைச்சர்களும் தொகுதியில் இருந்து பணியாற்ற முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார். அதேபோல் கவுன்சிலர்களும், அரசுக்கு நற்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதுடன், மக்கள் தேவை உணர்ந்து செயல்பட அறிவுறுத்தினார். ஆனால், ஏரியாவில் ஓரளவு செல்வாக்கு மிக்கவர்கள் தவிர, எளிய மக்கள் அணுக முடியாத அளவில் தான், சென்னை மாநகராட்சி கவுன்சிலர்கள் பலர் உள்ளனர்.- நமது நிருபர் -