தாம்பரம் : தாம்பரம் சானடோரியத்தில் கட்டப்பட்டு வரும், மினி பஸ் ஸ்டாண்ட் பணிகள் வேகம் பிடித்துள்ளதால், திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே பணிகள் முடிந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.தாம்பரம், சானடோரியத்தில் சுகாதாரத் துறைக்கு சொந்தமான, 3.77 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில், ஐந்து கோடி ரூபாய் மதிப்பில், புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் பஸ்களுக்கான, மினி பஸ் ஸ்டாண்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ஐந்து கோடியில், நகராட்சி பொது நிதி இரண்டு கோடி ரூபாய், தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு நிதி நிறுவனத்திடம் இருந்து மூன்று கோடி ரூபாய் கடன் ஆகியவை அடங்கும்.இதற்காக, 2009ம் ஆண்டு டெண்டர் கோரப்பட்டது. மூன்று முறை டெண்டர் கோரியும், பணியை செய்ய யாரும் முன்வரவில்லை. நான்காவது முறையாக டெண்டர் கோரப்பட்டு, பணிகள் துவக்கப்பட்டன.
இந்த பஸ் ஸ்டாண்டில், 27 பஸ் வே, 31 கடைகள், இரண்டு கழிப்பிடங்கள், உணவு அருந்தும் இடம், நூலகம், பொருட்கள் வைக்கும் அறை, நேரக் காப்பாளர் அறை ஆகிய வசதிகள் அமையவுள்ளன.ஒன்றரை வருடத்திற்குள் பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, கட்டுமான பணிகள் முடிந்து, கான்கிரீட் பணிகள் நடந்து வருகின்றன. மொத்த பணிகளில், 75 சதவீதம் முடிந்துள்ளன. இதே வேகத்தில் பணிகள் தொடருமானால், திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே, பஸ் ஸ்டாண்ட் பயன்பாட்டிற்கு வந்துவிடும் வாய்ப்புள்ளது.இது குறித்து, நகராட்சி கமிஷனர் சிவசுப்ரமணியன், ''இந்த பஸ் ஸ்டாண்டில் புறநகர் பஸ்கள் மட்டுமின்றி, வெளியூர் பஸ்களும் நின்று செல்லும். தற்போது, பிளாட்பாரம் பணி மட்டுமே உள்ளது. சில மாதங்களில் அனைத்து பணிகளும் முடிந்துவிடும்,'' என்றார்.