| ADDED : ஆக 05, 2011 02:34 AM
சென்னை : வடபழனி கோவிலுக்கு திரும்ப கொடுக்க வேண்டிய நிலம் மற்றும் வாடகையை திரும்ப கொடுப்பதில், சமூக நலத்துறையினர் மீண்டும் மெத்தனம் காட்டி வருகின்றனர்.சென்னை வடபழனி கோவிலுக்கு சொந்தமான 5.52 ஏக்கர் நிலம் வடபழனி காந்திநகர் பகுதியில் உள்ளது. இந்த நிலத்தை கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சமூக நலத்துறையின் பயன்பாட்டிற்காக எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது போடப்பட்ட ஒப்பந்தத்தில், இந்த நிலம் 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாகவும், மாத வாடகையாக ஒரு லட்சம் ரூபாய் சமூக நலத்துறை கோவில் நிர்வாகத்திற்கு அளிக்கும் எனக் கூறப்பட்டது.பின்னர் அந்த நிலத்தின் குறிப்பிட்ட சிறு பகுதியில், சமூக நலத்துறை சார்பில் சென்னையில் தங்கி வேலை பார்க்கும் மகளிர்களுக்கான விடுதி கட்டப்பட்டது. மீதமுள்ள இடத்தில் மேலும் பல திட்டங்களின் கட்டடங்கள் கட்டப்படும் எனவும் கூறப்பட்டது. இந்த சூழ்நிலையில், கடந்த 22 மாதங்களாக, சமூக நலத்துறை நிலத்திற்கான வாடகையை கோவில் நிர்வாகத்திற்கு அளிக்கவில்லை. இந்நிலையில் கடந்த 2010ம் ஆண்டு டிசம்பர் மாதம், இது குறித்து உறுதியான முடிவு எடுக்கும் வகையில் கோவில் நிர்வாகத்தினரும், சமூக நலத்துறை முதன்மைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது குத்தகைக்கு எடுக்கப்பட்ட நிலத்தில் ஒரு ஏக்கர் போக, மீதம் 4.52 ஏக்கர் நிலத்தை, வடபழனி கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க சமூக நலத்துறையினர் முன் வந்தனர். அத்துடன், வாடகை பாக்கியை திரும்ப தர சம்மதித்தனர்.சமூக நலத்துறையால் கட்டப்பட்ட விடுதி உள்ளிட்ட ஒரு ஏக்கர் நிலத்திற்கு மட்டும், இனி மாத வாடகையை பெற்றுக் கொள்வற்கு வடபழனி கோவில் நிர்வாகம் தயாராக இருந்தது. இந்த நிலையில் கடந்த ஏழு மாதங்களாகியும், நிலம் மற்றும் வாடகையை திரும்ப தரும் விஷயத்தில் சமூக நலத்துறையினர் திரும்பவும் மெத்தனம் காட்டி வருகின்றனர்.இது குறித்து, பேசிய இந்து அறநிலையத் துறை அதிகாரிகள், ''பயன்படுத்த வேண்டிய நிலத்தை வெறுமனே போட்டு வைப்பதால், யாருக்கும் பயன் இல்லை. கோவில் ஊழியர்களுக்கு வீடு கட்டுதல், திருமணம் மண்டபம் கட்டுதல் உள்ளிட்ட பல திட்டங்களை, இந்த நிலத்தில் செயல்படுத்துவதற்கான திட்டம் உள்ளது. கோவிலுக்கு சொந்தமான நிலத்தை தாமதமின்றி திரும்ப தர, சமூக நலத்துறையினர் ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றனர்.- எஸ்.விவேக் -