சென்னை : சார்பதிவாளர், தொழிலாளர் நல உதவி ஆய்வாளர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியிடப்பட்டன. சென்னையில், சைதை துரைசாமி மனிதநேயம் மையத்தில் பயிற்சி பெற்றவர்களில், 249 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். வருவாய்த் துறை, தொழிலாளர் நலத் துறை, இந்து அறநிலையத் துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத் துறைகளில், குரூப்-2 நிலையில் காலியாக இருந்த 1,628 அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வு, கடந்த ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி நடந்தது. இதில் தகுதி பெற்றவர்களுக்கு, கடந்த பிப்ரவரி 2ம் தேதி முதல், மார்ச் 28 வரை, டி.என்.பி.எஸ்.சி., அலுவலகத்தில் நேர் முகத் தேர்வு நடந்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் தேர்வு முடிவுகளை, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டது. ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும், கணிசமானவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். சென்னை மனிதநேயம் இலவச ஐ.ஏ.எஸ்., அகடமியில் பயிற்சி பெற்ற 400 பேரில், 249 பேர் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். இவர்களில், கரூரைச் சேர்ந்த கண்ணன், ஈரோடைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் ஆகியோர், நகராட்சி கமிஷனர் பதவிகளுக்கான தேர்வில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்தனர். மாவட்ட வாரியாக தேர்வு பெற்றவர்களின் பதிவெண்கள் விவரம், டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்தில் (www.tnpsc.gov.in ) வெளியிடப்பட்டுள்ளது. 50க்கும் மேற்பட்டோரின் முடிவுகள், சான்றிதழ் பிரச்னை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.