சென்னை:புதிய தலைமைச் செயலகம் கட்டுமானம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற
நீதிபதி தங்கராஜ் கமிஷன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து, தி.மு.க., பொதுச்
செயலர் அன்பழகன் தாக்கல் செய்த பொதுநல மனுவை, சென்னை ஐகோர்ட் தள்ளுபடி
செய்தது.சென்னை அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்ட, புதிய தலைமைச் செயலக
கட்டுமானத்தில் முறைகேடு நடந்ததாக கூறி, அதுகுறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற
நீதிபதி தங்கராஜ் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. இதற்கான அரசாணை, கடந்த
ஜூன் மாதம் பிறப்பிக்கப்பட்டது.இதை எதிர்த்து தி.மு.க., பொதுச் செயலர்
அன்பழகன் பொதுநல மனுத் தாக்கல் செய்தார். இம்மனு, தலைமை நீதிபதி இக்பால்,
நீதிபதி சிவஞானம் அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன் முதலில் விசாரணைக்கு வந்தது.
மனு விசாரணைக்கு உகந்தது தானா என்பதை முதலில் விசாரிக்க வேண்டும் என,
அட்வகேட்-ஜெனரல் நவநீதகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து, மனுவை
நீதிபதிகள் டி.முருகேசன், சசிதரன் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது. அரசு தரப்பில் மூத்த வழக்கறிஞர் நாகேஸ்வரராவ், அட்வகேட்-ஜெனரல்
நவநீதகிருஷ்ணன், கூடுதல் அட்வகேட்-ஜெனரல் குருகிருஷ்ணகுமார், கூடுதல் அரசு
பிளீடர் ஆர்.ரவிச்சந்திரன் ஆஜராகினர். மனுவை, 'டிவிஷன் பெஞ்ச்' தள்ளுபடி
செய்து பிறப்பித்த உத்தரவு:விசாரணை கமிஷன் நியமனம் தொடர்பாக, பொதுநல
மனுவில் மனுதாரர் கேள்வி எழுப்பியுள்ளார். மனுவில், பதில் மனுவில்
கூறியுள்ள விவரங்களைப் பார்க்கும் போது, அதில் பொது நலன் எதுவும் இல்லை
என்பதையே காட்டுகிறது. அரசியல் கட்சியான தி.மு.க., மீது முதல்வர்
ஜெயலலிதாவுக்கு விரோதம் உள்ளதாகவும், அரசியல் பழிவாங்கும் விதத்தில் அவர்
செயல்படுவதாகவும் மனுவில் கூறப்பட்டுள்ளது.தனிப்பட்ட, கட்சி நலன் அடிப்படையிலான பிரச்னைகளை தீர்ப்பதற்காக தவிர, பொது
நலன் நோக்கில் இந்த மனு இல்லை. விசாரணை கமிஷன் உண்மையை கண்டறிந்து,
அரசுக்கு பரிந்துரைகளை அளிக்கும். அந்த பரிந்துரைகளின்படி, அரசு
செயல்படலாம். செயல்படாமலும் இருக்கலாம். எனவே, தற்போதைய கட்டத்தில் விசாரணை
கமிஷன் குறித்து, கேள்வி எழுப்ப முடியாது. எனவே, இந்த மனு விசாரணைக்கு
உகந்ததல்ல. தள்ளுபடி செய்யப்படுகிறது.இவ்வாறு 'டிவிஷன் பெஞ்ச்'
உத்தரவிட்டுள்ளது.