சென்னை விநாயகா மிஷன் அணி; பெண்கள் வாலிபாலில் அசத்தல்
சென்னை; மாநில அளவிலான பெண்கள் வாலிபால் போட்டியில், சென்னை விநாயகா மிஷன் அணி, ஒட்டுமொத்த 'சாம்பியன்' பட்டத்தையும் வென்றது. சூசன் வாலிபால் கிளப் சார்பில், மாநில அளவில் பெண்களுக்கான வாலிபால் போட்டி, நெல்லிக்குப்பம் ஆர்.ஆர்.பள்ளி மைதானத்தில் நடந்தது. மாநிலத்தின் சிறந்த ஆறு அணிகள் பங்கேற்றன. போட்டிகள் 'லீக்' முறையில் நடந்தன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் இரண்டு முறை விளையாட வேண்டும். இதில் அதிக வெற்றி பெறும் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றும். நேற்று முன்தினம் நடந்த போட்டியில் சென்னையின் சிவந்தி கிளப் அணி, ஈரோட்டின் பி.கே.ஆர்., அணியை எதிர்த்து மோதியது. இதில் அசத்திய சிவந்தி அணி 25 - 17, 15 - 25, 25 - 23, 25 - 19 என்ற செட் புள்ளியில் பி.கே.ஆர்., அணியை வீழ்த்தியது. அடுத்த போட்டியில், சென்னை மாவட்டத்தின் விநாயகா மிஷன் அணி, மினி பவுண்டேஷன் அணியுடன் மோதியது. இதில் விநாயகா மிஷன் அணி 25 - 10, 25 - 18, 30 - 28 என, த்ரில்லர் வெற்றியை பதிவு செய்தது. போட்டிகள் முடிவில், சென்னை விநாயகா மிஷன் அணி அதிக வெற்றிகளுடன் முதலிடம் பெற்று, 'சாம்பியன்' கோப்பையை கைப்பற்றியது. சென்னை சிவந்தி கிளப் அணி, இரண்டாவது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது.