நீதிமன்ற வழக்குகள் நெருக்கடியால் 104 அலுவலர்களுக்கு பதவி உயர்வு:சி.எம்.டி.ஏ., நடவடிக்கை
சென்னை:நீதிமன்ற வழக்குகளால் ஏற்பட்ட நெருக்கடி காரணமாக, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ., முதல் முறையாக, பல்வேறு நிலைகளில், 104 அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளித்துள்ளது.சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமமான சி.எம்.டி.ஏ.,வில் நிர்வாகம், தொழில்நுட்பம் என, இரு பிரிவுகளில் அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு பணி நியமனம், பதவி உயர்வு, இடமாற்றம் மற்றும் ஒழுங்கு நடவடிக்கைகளில் பணி விதிகள் உள்ளன. இதில், 1980ம் ஆண்டு அரசு ஒப்புதல் அளித்த பணி விதிகளே அமலில் இருந்தது. இந்நிலையில், புதிய பணி விதிகளுக்கு, 2022ல் அரசு ஒப்புதல் அளித்தது.இதன் அடிப்படையில் பணியிடங்கள் எண்ணிக்கை சீரமைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது. பழைய விதிப்படி தகுதி பெற்றவர்கள் பலருக்கும், புதிய பணி விதிகளை சுட்டிக்காட்டி பதவி உயர்வு மறுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதில், பணியாளர்கள், அலுவலர் சங்கங்களிடம் பேச்சு நடத்தவும், அவர்களின் மனுக்களை பெறுவதையும் உயரதிகாரிகள் தவிர்த்ததாக புகார் எழுந்தது. இதனால், பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவுகளை சேர்ந்த அலுவலர்கள், தனித்தனியாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்நிலையில், உதவி பொறியாளர் ஒருவரை அதிகார வரம்பை மீறி உறுப்பினர் செயலர் பணியிடை நீக்கம் செய்தது தொடர்பான வழக்கில், உயர் நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை தெரிவித்தது. இதில் உறுப்பினர் செயலர் அன்சுல்மிஸ்ராவுக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இதை தொடர்ந்து மற்ற அலுவலர்களின் வழக்குகளும் அடுத்தடுத்த நிலைக்கு முன்னேற்றம் அடைந்தது. இது சி.எம்.டி.ஏ., உயரதிகாரிகளுக்கு சட்ட ரீதியான நெருக்கடியை ஏற்படுத்தியது. இது தொடர்பான சி.எம்.டி.ஏ., பணியாளர்கள், அலுவலர்கள் கூறியதாவது: பழைய பணி விதிகளின் அடிப்படையில் தகுதி பெற்ற அனைவருக்கும் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. திட்ட உதவியார் முதல் சீப் பிளானர் வரையிலான தொழில்நுட்ப பிரிவு அலுவலர்கள், நிர்வாக பிரிவில், உதவியாளர், கண்காணிப்பாளர், சுருக்கெழுத்தர், நிர்வாக அலுவலர் வரை, 104 பேருக்கு பதவி உயர்வு கிடைத்துள்ளது. நீதிமன்றத்தில் அடுத்தடுத்து தொடரப்படும் வழக்குகள் காரணமாக ஏற்பட்ட அழுத்தம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை உயரதிகாரிகள் தலையீடு காரணமாக நிகழ்ந்துள்ளதாக பார்க்கிறோம். இத்துடன், துணை திட்ட அலுவலர் உள்ளிட்ட பல்வேறு நிலைகளில் காலி பணியிடங்களை அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக நிரப்பும் நடவடிக்கைகளும் துவங்கியுள்ளன. இதனால், சி.எம்.டி.ஏ., முழுதிறனுடன் செயல்பட வாய்ப்பு ஏற்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.