உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கடலோர மேலாண்மை வரைபடம் தயாரிப்பில்... குளறுபடி! மீனவ கிராமங்கள் மாயமானதாக கொந்தளிப்பு

கடலோர மேலாண்மை வரைபடம் தயாரிப்பில்... குளறுபடி! மீனவ கிராமங்கள் மாயமானதாக கொந்தளிப்பு

பிராட்வே, மத்திய அரசின், 2019 கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை அமல்படுத்துவதற்கான வரைபடத்தை தயாரிப்பதில், தமிழக அதிகாரிகளின் குளறுபடியால் எதிர்ப்பு எழுந்துள்ளது.கடற்கரையை பாதுகாக்கவும், மீனவர்களின் வாழ்வாரத்தை பாதுகாக்கவும், சி.ஆர்.இசட் எனப்படும், கடலோர ஒழுங்குமுறை மண்டலம் செயல்படுகிறது. கடலோர பகுதிகளில் கட்டுமான திட்டங்கள் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை முறைப்படுத்த, 2011ல் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் வெளியிடப்பட்டன. இதை தொடர்ந்து, மத்திய அரசு, 2019ம் ஆண்டு அடுத்தகட்ட கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளை வெளியிட்டது. மீனவ கிராமங்கள், அவர்களது பொது சொத்துக்கள், மீனவர்களின் சமூக கட்டமைப்புகள், மீன்பிடி மற்றும் மீன் இனப்பெருக்கம் செய்யும் இடங்கள், மீனவர்களின் நீண்ட கால குடியிருப்பு திட்டங்கள் ஆகியவை, கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைபடத்தில் தெளிவாக குறிப்பிடப்படும். இந்த விபரங்கள், கடலோர மண்டல மேலாண்மை திட்டம் 2019 வரைபடத்தில், சட்டப்பூர்வமாக பதிய வேண்டும். அனைத்து மாநிலங்களும், இந்த புதிய விதிகளின் அடிப்படையில் கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைபடங்களை வெளியிட வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டது. ஆனால், தமிழகத்தில் தற்போதும், 2011ம் ஆண்டு கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் தான் நடைமுறையில் உள்ளது. இதில், 2019 விதிகளின் அடிப்படையில் புதிய வரைபடங்கள் தயாரிக்க சுற்றுச்சூழல் துறை நடவடிக்கை எடுத்தது. இதற்கான வரைவு வரைபடங்களை வெளியிட்டு, கருத்து கேட்பு கூட்டங்களுக்கு சுற்றுச்சூழல் துறை, 2023ல் அழைப்பு விடுத்தது. அப்போது வெளியிடப்பட்ட வரைவு வரைபடங்களில், தமிழகம் முழுதும் கடலோர பகுதிகளில், 400 மீனவ கிராமங்கள் விடுபட்டுள்ளதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தடை விதித்தது. சமீபத்தில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, உரிய திருத்தங்களுடன் கடலோர ஒழுங்குமுறை மண்டல வரைவு வரைபடங்கள் தயார் நிலையில் இருப்பதாக, தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதில், மீனவ குப்பங்கள் விடுபட்டுள்ளதாக மீனவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தின் 12 மாவட்டங்களில் வெளியிடப்பட்டுள்ள வரைபடத்தில், முழுமையான விபரங்கள் பதியப்படாததால், மீனவர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வரும் வாழ்வாதார இடங்கள், அதன் சட்டப்பூர்வ பாதுகாப்பை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றை தனியார் கபளீகரம் செய்ய வாய்ப்பு உருவாகி இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இந்த திட்ட வரைபடத்தில், சென்னையில் 12 மீனவ கிராமங்களும், செங்கல்பட்டில் 26 மீனவ கிராமங்களும் விடுபட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், மீனவ கிராமங்களில் தங்களின் வாழ்விடம் பறிபோகும் அபாயம் உருவாகி இருப்பதாக மீனவர்கள் ஆவேசம் அடைந்துள்ளனர். இதை கண்டித்து, சென்னையில் நேற்று மீனவர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பிராட்வே, கலெக்டர் அலுவலகம் முன் நுாற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள், சுற்றுச்சூழல் வனம் மற்றும் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை விதிமுறைகளை பின்பற்றி, வரைவு கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைபடங்களை செய்து முடிக்க வேண்டும் என, 2013ல் இருந்து தமிழகத்தின் 14 மாவட்ட மீனவர்கள் போராடி வருகின்றனர். இச்சூழலில், இன்றளவும் கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணையை அரசு முறையாக செய்து முடிக்கவில்லை. மீனவர்களின் வாழ்வாதார பொது சொத்துகளான பெரிய வலை இழுக்கும் இடங்கள், மீன் விற்கும் சந்தை, வலை காயவைக்கும் இடங்கள், படகு பழுதுபார்க்கும் இடங்கள் உள்ளிட்டவை, கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைபடத்தில் இருப்பதை, அரசு உறுதி செய்ய வேண்டும். ஆறுமுகம், மீனவ கிராம தலைவர், கானாதுார் ரெட்டிகுப்பம்கடலோர மண்டல மேலாண்மை திட்ட வரைபடத்தில், சென்னையில், திருவல்லிக்கேணி துவங்கி திருவான்மியூர் வரை, மொத்தம் 14 மீனவ கிராமங்கள் இடம் பெற்றிருந்தன. இதில், நொச்சிக்குப்பம், திருவான்மியூர் குப்பம் மட்டுமே தற்போதைய வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. நொச்சிகுப்பம், பவானிகுப்பம், சீனிவாச நகர், ஓடை குப்பம் உட்பட 12 மீனவ பகுதிகள் விடுபட்டுள்ளன.அதேபோல், செங்கல்பட்டு மாவட்டத்தில் கானத்துார் ஒண்டிக்குப்பம் துவங்கி, கடம்பாக்கம் ஆலம்பரைகுப்பம் வரை, மொத்தம் 36 மீனவ கிராமங்கள் உள்ளன. இதில், கோவளம், புதுகல்பாக்கம் உட்பட 10 மீனவ கிராமங்கள் மட்டுமே, வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. விடுபட்ட அனைத்து மீனவ கிராமங்களையும், அவர்களின் நிரந்தர குடியிருப்புகளையும் கொண்டு வராமல், விதிகளை முறையாக பின்பற்றாமல் அவசரகதியாக பட்டியல் தயாரித்துள்ளனர். தமிழக அரசு, முறையாக ஆய்வு செய்து, மீனவர்களின் வாழ்விடம், வாழ்வாதார உரிமைகளை பாதுகாக்க வேண்டும்.- பாரதி, தலைவர், நெய்தல் மக்கள் கட்சி


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Mani . V
ஜூலை 27, 2024 06:41

அப்படியென்றால் அந்தக் கிராமங்கள் தனியாரால் ஆட்டையைப் போடப்பட இருக்கிறது. அதுக்கு முன்கூட்டியே திட்டமிட்டுத்தான் இந்த கோல்மால் வேலையைச் செய்துள்ளார்கள்.


Duruvesan
ஜூலை 27, 2024 05:14

உங்களுக்கு தான் மாதம் 1000 வருது இல்லை, ஓசி பஸ்ல போறீங்க, எலெக்ஷன் அப்போ குவாட்டர் பிரியாணி குடுக்கறாங்க, அப்புறம் ஏன்?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை