உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வெளிச்சந்தையில் மாடுகள் விற்பனை நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு உத்தரவு

வெளிச்சந்தையில் மாடுகள் விற்பனை நடவடிக்கை எடுக்க கலெக்டருக்கு உத்தரவு

சென்னை:காஞ்சிபுரத்தில் மாடுகளை கட்டி பராமரிக்கும் இடமான கோ சாலையில் ஒப்படைக்கப்படும் மாடுகளை, சட்ட விரோதமாக வெளி சந்தையில் விற்று மோசடியில் ஈடுபட்ட கோ சாலை நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க கோரிய மனுவை பரிசீலிக்க, மாவட்ட கலெக்டருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாநகராட்சி 48வது கவுன்சிலர் ஆர்.கார்த்திக் தாக்கல் செய்த மனு: காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுற்றித்திரியும் ஏராளமான மாடுகளால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இதை பிடித்து, விச்சந்தாங்கல் கிராமத்தில் உள்ள 'கவுரக்ஷா கமாண்டோ படை பாரத்' என்ற பெயரில் செயல்படும் கோ சாலையில் ஒப்படைக்கப்படுகிறது. இதற்கு கோ சாலை நிர்வாகத்துடன், கடந்தாண்டு மார்ச், 7ல் ஒப்பந்தம் போடப்பட்டது. இங்கு ஒப்படைக்கப்படும் மாடுகளை விற்க உரிமையில்லை. ஆனால், சதீஷ் என்பவரின் மாட்டை கோ சாலை ஊழியர்கள், வெளி சந்தையில் பணத்துக்காக விற்றுள்ளனர். தவிர, பலரிடம் லஞ்சம் பெற்றுள்ளனர். காஞ்சிபுரம் மட்டுமின்றி ஸ்ரீபெரும்புதுார், குன்றத்துார் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் செயல்படும் இந்த கோ சாலை நிர்வாகத்துடன், ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. எனவே, கவுரக்ஷா கமாண்டோ படை பாரத் என்ற அமைப்புடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். மேலும் திருவான்மியூர் விலங்குகள் நல வாரியம், ஒரு குழுவை அமைத்து, மாநில முழுதும் உள்ள கோ சாலைகளில் ஆய்வு செய்து, சட்டவிரோதமாக அடிமாட்டுக்கு கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து காஞ்சிபுரம் கலெக்டரிடம் ஜூலை 28ல் புகார் அளித்தேன். அந்த புகார் மனுவை பரிசீலித்து, உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு, தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா, நீதிபதி சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.வீரராகவன் ஆஜராகி, ''கோ சாலையில் ஒப்படைக்கப்படும் மாடுகளை சட்டவிரோதமாக வெளிச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்கின்றனர். ''சம்பந்தப்பட்ட கோ சாலையுடன் போடப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். இதுகுறித்த புகார் மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும்,'' என்றார். இதையடுத்து நீதிபதிகள், மனுதாரர் அளித்த மனுவை, மாவட்ட கலெக்டர் பரிசீலிக்க உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ