உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வணிக பயன்பாட்டு கட்டடங்கள் மறு ஆய்வு செய்கிறது மாநகராட்சி சொத்துவரியும் ரூ.1,500 கோடி வசூல்

வணிக பயன்பாட்டு கட்டடங்கள் மறு ஆய்வு செய்கிறது மாநகராட்சி சொத்துவரியும் ரூ.1,500 கோடி வசூல்

சென்னை, சென்னையில் வணிக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்படும் குடியிருப்புகளுக்கான சொத்து வரியை மாற்றி அமைக்கும் வகையில், மறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.சென்னை மாநகராட்சி எல்லையில், 13.5 லட்சம் சொத்து உரிமையாளர்கள் உள்ளனர். இவர்கள், ஆண்டுக்கு, 1,800 முதல் 2,000 ரூபாய் வரை, மாநகராட்சிக்கு சொத்துவரி செலுத்தி வருகின்றனர். இதில், 3 லட்சம் சொத்து உரிமையாளர்கள், தாங்கள் காண்பித்த கட்டடத்தின் பரப்பளவில் மாற்றம் இருந்ததால், அவற்றை மறு ஆய்வு செய்யும் பணி, தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் தரப்பட்டுள்ளது.

கூடுதல் வருவாய்

தற்போது, குடியிருப்புகள் மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டாம் என, தமிழக அரசு உத்தரவிட்டதை தொடர்ந்து, அவை கைவிடப்பட்டுள்ளது.இந்நிலையில், மாநகராட்சியின் வரி வருவாயை அதிகரிக்கும் வகையில், குடியிருப்புகளாக இருந்து, வணிக பயன்பாட்டிற்கு மாற்றப்பட்ட கட்டடங்களை மறு ஆய்வு செய்யும் பணியை மாநகராட்சி துவங்கியுள்ளது.மின் வாரியம், ஜி.எஸ்.டி., - தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, குடிநீர் வாரியங்களில் உள்ள வணிக பயன்பாட்டு பதிவு அடிப்படையில், 2.10 லட்சம் கட்டடங்கள், மாநகராட்சியில் சொத்துவரி மறு ஆய்வு செய்யப்பட உள்ளது. இதற்காக, 85 வரி மதிப்பீட்டாளர்கள் நியமிக்கப்பட்டு, பணிகள் நடந்து வருகிறது.இதுகுறித்து, மாநகராட்சி வருவாய் அலுவலர் பானுசந்திரன் கூறியதாவது:சென்னை மாநகராட்சியில், இந்த நிதியாண்டில் இதுவரை, 1,500 கோடி ரூபாய் சொத்து வரி வசூலிக்கப்பட்டு உள்ளது. மேலும், அக்டோபர் முதல், 6 சதவீதம் சொத்துவரி உயர்த்தப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக ஆண்டுக்கு, 19 கோடி ரூபாய் வரை கூடுதல் வருவாய் கிடைக்கும்.

இரு மடங்கு உயர்வு

தற்போது, சொத்துவரி வசூலிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல், வணிக பயன்பாட்டு கட்டடங்கள் மறு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அதில், வணிக பயன்பாட்டில் இருந்து குடியிருப்புக்கான கட்டணம் செலுத்தி வந்தால், அவர்களுக்கு சொத்துவரி இரண்டு மடங்காக உயர்த்தப்படும். குறிப்பாக, 600 ரூபாய் செலுத்தி வந்திருந்தால், 1,200 ரூபாயாக உயர்த்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

அலைகழிப்பு!

சென்னை மாநகராட்சிக்கான சொத்துவரியை பெரும்பாலனோர், ஆன்லைன் முறையில் தான் செலுத்தி வருகின்றனர். சமீபகாலமாக, ஆன்லைனில் சொத்துவரி செலுத்துவோருக்கு, தங்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டு விட்டாலும், மாநகராட்சியில் சொத்துவரி செலுத்தியதற்கான ரசீது வருவதில்லை. இதுகுறித்து, மண்டல வருவாய் துறை அதிகாரிகளிடம் கேட்டால், மாநகராட்சி தலைமையிட அலுவலகத்துக்கு செல்லும்படி அலைக்கழிக்கின்றனர். தலைமையிடத்திலும் முறையான பதில் கிடைக்காமல், ஆன்லைன் முறையில் சொத்துவரி செலுத்துவோர் அவதிப்பட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி