பெண்ணை விடுதிக்கு அழைத்த விவகாரம் அதிகாரிகளுக்கு கமிஷனர் எச்சரிக்கை
ஆவடி, பூந்தமல்லி, சென்னீர்குப்பம், குமரன் நகரைச் சேர்ந்தவர், 22 வயது இளம்பெண். கடந்த 6ம் தேதி, திருடு போன அவரது வாகனத்தை திரும்ப வாங்குவதற்கு ஆவடி காவல் நிலையம் சென்றுள்ளார். அப்போது, ஆவடி குற்றப்பிரிவில் பணிபுரியும் காவலர் ஹரிதாஸ், 30 என்பவர், இளம் பெண்ணை தொடர்பு கொண்டு, 'நீ அழகாக இருக்கிறாய், ஆவடி செக்போஸ்ட் அருகில் உள்ள விடுதிக்கு வா' என அழைத்துள்ளார். அண்ணனுடன் விடுதிக்கு சென்ற அந்த இளம் பெண், ஹரிதாஸை பிடித்து ஆவடி போலீசில் ஒப்படைத்தார். விசாரணைக்கு பின் ஹரிதாஸ் நேற்று முன்தினம் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஹரிதாஸ் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட நிலையில், குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரமணியிடம் விளக்கம் கேட்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 'காவல் நிலையங்களில் போலீசாரின் நடவடிக்கை குறித்து அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்; கண்காணிக்க தவறும் பட்சத்தில் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, கமிஷனர் சங்கர் எச்சரித்துள்ளார்.