உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வீடு தாமதமாக ஒப்படைத்த நிறுவனம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

வீடு தாமதமாக ஒப்படைத்த நிறுவனம் ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சென்னை: வீட்டை ஒப்படைக்காமல் தாமதித்த கட்டுமான நிறுவனம், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என, ரியல் எஸ்டேட் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு தையூர் கிராமத்தில் அக் ஷயா நிறுவனம் சார்பில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படுகிறது. அதில் வீடு வாங்க, மஞ்சுளா கிருஷ்ணா என்பவர், 2017ல் ஒப்பந்தம் செய்தார். இதன்படி, அவர், 52.42 லட்சம் ரூபாயை, பல்வேறு தவணைகளில் செலுத்தி வந்துள்ளார். 2017ம் ஆண்டு, பணிகள் முடிந்து வீடு ஒப்படைக்கப்படும் என, கட்டுமான நிறுவனம் ஒப்பந்தத்தில் தெரிவித்து இருந்தது. ஆனால், ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட காலத்தில் வீட்டை ஒப்படைக்கவில்லை. இதனால், வீடு வாங்குவதை கைவிட முடிவு செய்த மஞ்சுளா கிருஷ்ணா, அதை கட்டுமான நிறுவனத்துக்கு தெரிவித்தார். இதற்கு, கட்டுமான நிறுவனம் தரப்பில் உரிய பதில் வராத நிலையில், ரியல் எஸ்டேட் ஆணையத்தில் மஞ்சுளா கிருஷ்ணா புகார் செய்தார். இந்த புகார் தொடர்பாக, ரியல் எஸ்டேட் ஆணைய விசாரணை அலுவலர் உமா மகேஸ்வரி பிறப்பித்த உத்தரவு: புகாரில் குறிப்பிடப்பட்ட கட்டுமான நிறுவனம், குறிப்பிட்ட காலத்தில் வீட்டை ஒப்படைக்காதது உறுதியாகிறது. அந்நிறுவனத்திடம் பணம் செலுத்தியவர், வீட்டுக்காக 7 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, குறிப்பிட்ட காலத்தில் வீடு கிடைக்காததால் ஏற்பட்ட மன உளைச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்காக, கட்டுமான நிறுவனம், மனுதாரருக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும். அத்துடன் வழக்கு செலவுக்காக, ஒரு லட்சம் ரூபாயை, அந்நிறுவனம் வழங்க வேண்டும். இத்தொகையை, 90 நாட்களுக்குள் கட்டுமான நிறுவனம் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை