சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்த ஊழியர்கள் மறியல்
திரு.வி.க.: திரு.வி.க., நகர் மண்டலத்தில், தனியார் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் குப்பை அகற்றும் பணி மேற்கொண்டு வருகிறது. அந்நிறுவனம், மற்றொரு நிறுவனத்திடம், 'டாடா ஏஸ்' வாகனங்களை ஒப்பந்த அடிப்படையில் பெற்று, அதன் மூலம் குப்பை அகற்றும் பணி மேற்கொள்கிறது. இந்நிலையில், மூன்று மாதங்களாக, குப்பை அள்ளும் பணியை மேற்கொள்ளும், 'டாடா ஏஸ்' வாகன ஓட்டுநர்கள் 100 பேருக்கு, தனியார் ஒப்பந்த நிறுவனம் சம்பளம் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், மேயர் பிரியா கவுன்சிலராக உள்ள 74வது வார்டு, முரசொலி மாறன் பாலம் அருகே, திரு.வி.க.,நகர் மண்டலத்தின் குப்பை அள்ளும் லாரிகள் நிறுத்துமிடத்தின் வாசலில் அமர்ந்து, 40க்கும் மேற்பட்ட 'டாடா ஏஸ்' ஓட்டுநர்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, நிலுவையில் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் எனக்கூறி கோஷம் எழுப்பினர். தகவலறிந்து சென்ற ஓட்டேரி போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தினர். அதன்பின், கலைந்து சென்றனர்.