விதிகளை மீறி சாலை அமைக்கும் மாநகராட்சி தவிப்பு பள்ளத்தில் வீடுகள்; கழிவுநீர் புகும் அபாயம்
சென்னையில் மாதவரம், பெரம்பூர் உட்பட பல பகுதிகளில், 'மில்லிங்' செய்யாமல் சாலை புதுப்பிக்கப்படுவதால், வீடுகள் சாலை மட்டத்தில் இருந்து 1 அடி பள்ளத்திற்குள் செல்லும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனால், சிறுமழைக்கே மழை நீருடன் கழிவுநீர் குடியிருப்புகளுக்குள் புகுந்து, மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால், மக்களை கவரும் வகையில் பாழடைந்த சாலைகளை மேம்படுத்துவதில் அரசு கவனம் செலுத்த துவங்கியுள்ளது. இப்பணிகள், தமிழக நகர்ப்புற உட்கட்டமைப்பு சாலைகள் மேம்பாட்டு திட்டம், நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம் மற்றும் சிறப்பு திட்டங்களின் கீழ், பழைய சாலைகள் சுரண்டி எடுக்கப்பட்டு, புதிதாக சாலைகள் அமைக்கப்படுகின்றன. சென்னையில் சாலைகளை மேம்படுத்தும் பணியை, சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. போக்குவரத்து சாலைகள், சிறு தெருக்கள், குடியிருப்பு சாலைகள் என அனைத்திலும், சாலை புதுப்பிப்பு பணிகளின்போது, ஏற்கனவே இருந்த பழைய தார் பகுதியை, 'மில்லிங்' முறையில் 4 செ.மீ., ஆழத்திற்கு பெயர்த்தெடுத்த பிறகே, புதிய சாலை அமைக்க வேண்டும். ஆனால், சில இடங்களில் அவ்வாறு செய்யாதது, பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தி விடுகிறது. மாதவரம் மண்டலம், 32வது வார்டில் வெங்கடேஸ்வரா நகர், கீதா நகர், சுபாஷ் நகர், காமராஜர் நகர் உட்பட பல பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் உள்ள சாலைகள் சேதமடைந்து இருந்ததால், சமீபத்தில் சீரமைக்கப்பட்டன. ஒப்பந்ததாரர்கள், விதிமுறைப்படி சாலையை 'மில்லிங்' செய்யாமல் புதிய சாலை அமைத்ததால், சாலையின் உயரம் அதிகரித்துள்ளது. உயர் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, பழைய சாலையை 4 செ.மீ., சுரண்டி எடுத்துவிட்டு, புதிதாக தார்ச்சாலை அமைக்க வேண்டும். ஆனால், 15 செ.மீ., வரை சாலையை உயர்த்தி அமைக்கப்பட்டுள்ளது. சாலையின் உயரம் அதிகமானதால், குடிநீர் வாரியம் சார்பில், சாலையில் உள்ள பாதாள சாக்கடை கட்டமைப்புகளையும் உயர்த்த வேண்டியதாகிறது. இதனால், சாலை மட்டதைவிட வீடுகள் தாழ்வாகிவிட்டன. சிறு மழை பெய்தாலே, வீடுகளுக்குள் தண்ணீர் எளிதில் புகுந்து விடுகிறது. அத்துடன் கழிவுநீரும் பாதாள சாக்கடை குழாய் வழியே, வீடுகளுக்குள் புகுந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, வசதி படைத்தோர், ஜாக்கிகள் மூலம் வீடுகளை உயர்த்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பணம் இல்லாதவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இதேபோல், பெரம்பூர் பாரதி சாலை, ராஜாபாதர் சாலையில், இரு மாதங்களுக்கு முன் போடப்பட்ட தார் சாலைகள், 1 அடி வரை உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது, மில்லிங் செய்யாமல் புதுப்பிக்கப்படும் சாலை, பருவ மழை முடியும் வரை தாக்குப்பிடிக்குமா என்பதும் கேள்வியை எழுப்பி உள்ளது. பெரம்பூர் பகுதியில் அமைக்கப்பட்ட சாலைகள், 1 அடி வரை உயரம் அதிகரித்துள்ளது. சாலைப்பணியின் போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனிருந்து கவனிக்காததே இதற்கு காரணம். ஒப்பந்ததாரர்கள், அவரவர் விருப்பப்படி சாலையை சீரமைக்கின்றனர். இது பல்வேறு சிக்கல்களுக்கு வழிவகுத்து விடுகிறது. - ரகுமார் சூடாமணி, குடியிருப்போர் நலச்சங்கம், பெரம்பூர். சாலைகளை 4 செ.மீ., 'மில்லிங்' செய்து, அதே அளவு சாலை சீரமைக்கப்பட வேண்டும். ஏற்கனவே உள்ள சாலையை 'மில்லிங்' செய்யாமல் புதிய சாலை போடக்கூடாது. விதிகளை மீறி சாலை அமைக்கப்பட்டால், எங்கள் கவனத்திற்கு கொண்டு வரலாம். - திருமுருகன், மேற்பார்வை பொறியாளர் சென்னை மாநகராட்சி- நமது நிருபர் -