மாநகராட்சி இணையதள குளறுபடி செல்லப்பிராணிகள் பதிவில் சிக்கல்
சென்னை: மாநகராட்சியின் எச்சரிக்கை அறிவிப்பை தொடர்ந்து, செல்லப்பிராணிகளை பதிவு செய்ய உரிமையாளர்கள் ஆர்வம் காட்டும் நிலையில், இணையதள குளறு படியால் பதிவு செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. சென்னையில் தெருநாய்கள் மட்டுமல்ல வளர்ப்பு நாய்களும், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மட்டுமின்றி குழந்தைகளையும் விட்டு வைக்காமல் துரத்தி கடிக்கும் சம்பவங்கள் தொடர்கின்றன. இதனால், தெரு நாய்களுக்கு 'ரேபிஸ்' தடுப்பூசி போடும் பணியில் மாநகராட்சி ஈடுபட்டு வருகிறது. 'மைக்ரோசிப்' செல்லப்பிராணி களால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்கவும், வளர்க்க முடியாமல் அவற்றை சாலையில் விடுவதை தடுக்கவும், பதிவு உரிமம் பெற வேண்டும் என, மாநகராட்சி உத்தரவிட்டது. உரிமம் பெறும்போது நாய்களுக்கு, 'மைக்ரோசிப்' பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். அதன்படி, 10,000 என்ற எண்ணிக்கையில் தான் செல்லப்பிராணிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மற்றவர்கள் தங்கள் நாய்களை பதிவு செய்ய தயக்கம் காட்டி வருகின்றனர். இதனால், 'வரும் 24ம் தேதிக்குள் செல்லப்பிராணிகளை பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யப்படாத நாய்கள் கண்டறியப்பட்டால், உரிமையாளர்களுக்கு, 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, மாநகராட்சி எச்சரித்துள்ளது. இதைத் தொடர்ந்து, நாய் வளர்ப்போர், தங்கள் செல்லப்பிராணிகளுக்கு உரிமம் பெற, https://chennaicorporation.gov.in/gcc என்ற இணையதளத்தில் பதிவு செய்ய முயற்சித்து வருகின்றனர். ஆனால், பதிவு செய்வதில் சிக்கல் நீடித்து வருகிறது. 100 சதவீதம் இதுகுறித்து, செல்லப்பிராணிகள் வளர்க்கும் பெண் ஒருவர் கூறியதாவது: மூன்று மாதங்களுக்கு முன், மாநகராட்சி இணையத்தில் வளர்ப்பு நாய்க்கு உரிமம் பெற மொபைல் போன் எண்ணை பதிவு செய்தேன். பின் இணையத்திற்குள் செல்லாமல் மறுபடியும் பதிவு செய்யும்படி கேட்டதால், பதிவு முயற்சியை கைவிட்டேன். பதிவு செய்யாவிட்டால், 5,000 ரூபாய் அபராதம் என்று எச்சரித்ததால், மீண்டும் பதிவு செய்ய முயன்றேன். மாநகராட்சி இணையதளத்தில் மொபைல் போன் எண்ணை பதிய முடியவில்லை. சிரமப்பட்டு விண்ணப்பத்தில் கேட்ட விபரங்களை பதிவு செய்தபின், உரிமம் பெற முடியாமல் வெளியேறுகிறது. மற்றொரு மொபைல் போன் எண்ணில், பதிவு செய்தாலும், இதே பிரச்னைதான். பதிவுக்கான சிறப்பு முகாமை மாநகராட்சி நடத்தினால், செல்லப்பிராணிகளுக்கான பதிவு இலக்கை, 100 சதவீதம் எட்டலாம். இவ்வாறு அவர் கூறினார். மாநகராட்சி கால்நடை பிரிவு அலுவலர்கள் கூறுகையில், 'செல்லப் பிராணிகளை பதிவு செய்ய பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். சிலர் பதிவு செய்ய முடியவில்லை என்ற குற்றச்சாட்டும் வருகிறது. தொழில்நுட்ப பிரச்னை இருந்தால் தீர்வு காணப்படும். சிறப்பு முகாம் நடத்த ஆலோசிக்கப்படும்' என்றனர்.