மீண்டும் தலைதுாக்கும் மின் தடை பிரச்னை அதிகாரி மீது கவுன்சிலர்கள் சரமாரி குற்றச்சாட்டு
திருவொற்றியூர், திருவொற்றியூர் மண்டலத்தில், மின் தடை பிரச்னை மீண்டும் தலைதுாக்க துவங்கி உள்ளது. இது, மண்டல குழு கூட்டத்தில் எதிரொலித்தது. பெரும்பாலான கவுன்சிலர்கள் இது குறித்து சரமாரி குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர்.திருவொற்றியூர் மண்டல குழு கூட்டம், நேற்று காலை தி.மு.க., மண்டல குழு தலைவர் தனியரசு தலைமையில் நடந்தது.மண்டல உதவி கமிஷனர் விஜய் பாபு, செயற்பொறியாளர் பாண்டியன், பாபு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.இக்கூட்டத்தில், வார்டு 7ல், கார்கில் வெற்றி நகரில், சென்னை தொடக்கப்பள்ளிக்கு ஒரு கோடி ரூபாய் செலவில் கூடுதல் கட்டடம், 1.65 கோடி ரூபாய் செலவில் கே.சி.பி., சாலையில் புதிய பூங்கா, 1.65 கோடி ரூபாய் செலவில், புதிய பல்நோக்கு கட்டடம், தியாகராயபுரம், 2.50 கோடி ரூபாய் செலவில் சமுதாய நலக்கூடம் கட்டும் பணி உட்பட, 89 தீர்மானங்கள் நிறைவேறின.நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மற்றும் வார்டின் அடிப்படை வசதிகள் குறித்து, கவுன்சிலர்கள் பேசினர்.கார்த்திக், 7வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர்ஜோதி நகர் மற்றும் சாத்தாங்காடு மின் வாரியத்திற்கு, உதவி பொறியாளர் கிடையாது. இதனால், மின்தடையை சமாளிக்க முடியவில்லை. இரவில் ஏற்படும் மின் தடையால், பகுதிவாசிகள் நள்ளிரவில் வீதியில் இறங்கி போராடுகின்றனர். அதுமட்டுமல்லாமல் அடிக்கடி மின் தடை ஏற்படுவதாக குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர். வார்டில், 188 சாலைகள் உள்ளன. இதில், 29 சாலைகள் மட்டுமே போடப்பட்டுள்ளன. மற்ற சாலைகள் விடுப்பட்டுள்ளன. ஏழாவது வார்டுக்கு நிதி ஒதுக்குவது கிடையாது. இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவ சுடுகாட்டிற்கு சாலை மற்றும் குடிநீர் வசதி கிடையாது.சாமுவேல் திரவியம், 6வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர்என் வார்டு உட்பட்ட பகுதியில் 12 மணி நேரம் மின் தடை உள்ளது. இரு பிரிவுகளை ஒருவர் கவனிப்பதால், பணி பளு அதிகம் ஏற்படுகிறது. மாணிக்கம் நகர் சுரங்கப்பாதை பராமரிப்பு பணிக்காக மூடப்படுவதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்திற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். சுப்ரமணியம் நகர் ஈமசடங்கு மண்டபம் உள்ளிட்டவை தனக்கு சொந்தம் என, ஒருவர் உரிமை கொண்டாடுகிறார். பால்குட்டைக்கு வழங்கப்பட்ட பட்டாவை முழுதுமாக ரத்து செய்ய வேண்டும்.ஜெயராமன், 4வது வார்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கவுன்சிலர் தினமும் இரண்டு மணி நேரம் மின் தடை பிரச்னை உள்ளது. இதற்கு தீர்வே கிடையாதா. ஜெய்ஹிந்த் நகரில் மின் கம்பம் மற்றும் மின்மாற்றி மாற்றி தரவில்லை. கவுன்சிலர்கள் கார்த்திக், திரவியம் பேசியது உண்மையே. பல ஆண்டுகளாக பொறுப்பு அதிகாரிகளே உள்ளனர். தனி உதவி பொறியாளர் கிடையாது. நிழற்குடை பராமரிப்பு பணிகள், ஒப்பந்ததாரர் சரியாக செய்வதில்லை. ராமநாதபுரம் சமுதாய நலக்கூடம் திறக்கப்பட்டு, பயன்பாட்டிற்கு வரவில்லை.கவி. கணேசன், 12 வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் என் வார்டில், 95 சதவீதம் சாலை பணிகள் முடிந்துள்ளன. வார்டு பணிகள் குறித்து, கவுன்சிலர்களுக்கு குறிப்புரை வழங்க வேண்டும். அதிகாரிகள் தரவுகளுடன் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். ஒன்பது கிராம சபை கூட்டம் முடித்துள்ளேன். வார்டு கூட்டம் ஒன்றிற்கு, 5,000 ரூபாய் தர வேண்டும். இதுவரை தரவில்லை. அனைத்து வார்டுகளுக்கு பணம் தர வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்ட கேள்விக்கு, கிராம சபை கூட்டம் நடத்தவில்லை என, பதில் வருகிறது. மின்மாற்றி வேலிகளில் போஸ்டர் ஒட்டுபவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்டலத்தில் துாய்மை பணியாளர்கள், போஸ்டர் கிழிப்பதற்காகவே உள்ளனர். காலத்திற்கு வருவதேயில்லை. கடுமையாக மக்களிடம் பேசுகின்றனர். மெத்தனமாக செயல்படுகின்றனர்.