உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  குடிநீர், மின் வாரிய அதிகாரிகளால் ஓட்டு கேட்டு செல்ல முடியாத நிலை கவுன்சிலர்கள் குமுறல்

 குடிநீர், மின் வாரிய அதிகாரிகளால் ஓட்டு கேட்டு செல்ல முடியாத நிலை கவுன்சிலர்கள் குமுறல்

திருவொற்றியூர்: 'குடிநீர் மற்றும் மின் வாரிய பிரச்னைகளால், தேர்தலுக்கு ஓட்டு கேட்டு கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது' என, கவுன்சிலர்கள் குமுறினர். திருவொற்றியூர் மண்டல கூட்டம், தலைவர் தனியரசு தலைமையில் நடந்தது. இதில், மண்டல உதவி கமிஷனர் பத்மநாபன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், 63 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவேறிய தீர்மானங்கள், வார்டின் அடிப்படை தேவை குறித்து கவுன்சிலர்கள் பேசியதாவது: சிவகுமார், 1வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: தாழங்குப்பத்தில், பாதாள சாக்கடை போடவில்லை. மூன்று ஆண்டுகளாக கோருகிறேன். அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை நீடித்தால், தேர்தலுக்கு ஓட்டுக்கேட்டு கூட, அந்த பகுதிக்கு செல்ல முடியாது. கோமதி, 2வது வார்டு சுயேட்சை கவுன்சிலர் : சவுத்லாக் சாலை அமைக்க கோரி நடவடிக்கை இல்லை. தொழிற்சாலைகளில் இருந்த, சமூக மேம்பாட்டு நிதியை பெற்று அந்த பணியை மேற்கொள்ளலாம். சின்ன குப்பம் மழைநீர் வடிகால் பணிகள் விடுபட்டுள்ளன. ஐந்து இடத்தில் தார் சாலை தேவைப்படுகிறது. தமிழரசன், 3வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: எனது வார்டில் பல மின் பெட்டிகள் சேதமடைந்துள்ளன. உயிரிழப்புகள் ஏற்பட்டால் தான் நடவடிக்கை எடுப்பீர்களா. வெறும் மூன்று மின்பெட்டிகளை வைத்து எப்படி சமாளிக்க போகிறது மின்வாரியம். கிராமசபை கூட்டத்தில், மக்கள் தொடர்ந்து அந்த கேள்வியை எழுப்புகின்றனர். ஜெயராமன், 4வது வார்டு மா.கம்யூ., கவுன்சிலர்: தெரு பெயர் பலகையில், சென்னை - 19 என்பதற்கு பதிலாக, 51 என குறிப்பிடப்பட்டுள்ளது. தவறுதலாக அச்சான தெருபலகைகளை எடுத்து சென்றனர். ஆனால், மாற்று பலகை வைக்கவில்லை. வார்டில், 70 - 80 மின் பெட்டிகள் தரையோடு தரையாக உள்ளன. ராமநாதபுரத்தில் அழுத்தம் குறைவால், ஒரு மாதமாக குடிநீர் மேடான பகுதிகளுக்கு ஏறுவதில்லை. சுசீலா, 13வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: கன்னியா குருகுலம் பள்ளி வளாகத்தில், இரவு வேளைகளில் சமூக விரோதிகளின் நடமாட்டம் உள்ளது. 'சிசிடிவி' கேமராக்கள் அமைக்க வேண்டும். குடிநீர் தான் பெரும் பிரச்னையாக உள்ளது. தேர்தலுக்கு முன் சீர்செய்யவிட்டால், ஓட்டு கேட்டு செல்ல முடியாது. பானுமதி, 14வது வார்டு தி.மு.க., கவுன்சிலர்: குடிநீர் தான் எங்கள் வார்டில் பிரச்னையாக உள்ளது. திருச்சினாங்குப்பம் குடியிருப்புக்கு, கூடுதலாக மூன்று லாரிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். குடிநீர் வாரிய அதிகாரிகள் தலையை ஆட்டுவதுடன் சரி. எந்த பணிகளும் செய்வதில்லை. மின்பெட்டியில் இணைக்கப்பட்ட மின் வடம், தரைக்கு மேலே இருப்பதால், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. உடனடியாக, மண்ணில் புதைக்க வேண்டும். தனியரசு, தி.மு.க., மண்டல குழு தலைவர்: திருவொற்றியூர் மண்டலத்தில், வருவாய் வாரி குவிக்கும் தொழிற்சாலைகள் அதிகளவில் உள்ளன. அங்கிருந்து, சமூக மேம்பாட்டு நிதியை பெற்று, 'நமக்கு நாமே' திட்டத்தின் கீழ் மக்களுக்கான பல்வேறு திட்டப் பணிகளை மேற்கொள்ள, அதிகாரிகள் முனைப்பு காட்ட வேண்டும். மண்டல கூட்டத்தில், குடிநீர் மற்றும் மின் வாரிய பிரச்னைகள் தான் அதிகளவில் சுட்டிக் காட்டப்படுகின்றன. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ